காய்த்த மரத்துக்குத்தான் கல்லெறிபடும்: அதற்காக காய்க்காமல் இருக்க முடியாது- மாவை
காய்த்த மரத்துக்குத் தான் கல்லடி படும் எனவும் அதற்காக மறுமுறை காய்க்காமல் இருக்க முடியாது என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
யாழ். ஆவரங்கால் பகுதியில் நேற்றிரவு (திங்கட்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், “காய்த்த மரத்துக்குத்தான் கல்லெறிபடும் என்ற ஒரு பழமொழி இருக்கிறது. அது உண்மைதான். தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு காய்த்த மரம். அதனால்தான் கல்லெறி விழுகிறது.
இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் அபிவிருத்திக்கு என்ன செய்தார்கள் என்று கேட்கிறார்கள். போரால் பாதிக்கப்பட்ட மக்கள் வீடற்றவர்களாக இருக்கும்போது மஹிந்த அரசாங்கத்திடம் சென்று வீடுகளை கட்டித்தரக் கேட்டோம். அவர்கள் பணம் இல்லை என்றார்கள்.
இந்திய அரசிடம் கேட்டு 50 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கான திட்டத்தைக் கொண்டுவந்தோம். பல அபிவிருத்திகள் இடம்பெற்றுள்ளன.
யாழில் துறைமுகங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டன. பலாலியில் சர்வதேச விமான நிலையம் உருவானது இவ்வாறு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டன. இவையெல்லாம் அவர்களுக்குத் தெரியாதா” என அவர் கேள்யெழுப்பியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை