வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு தமது பூர்வீகத்தைப் பாதுகாக்கும் வரலாற்றுக் கடமை உள்ளது- உதயகுமார்
வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு தமது பூர்வீகத்தைப் பாதுகாக்கும் வரலாற்றுக் கடமை உள்ளது என கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பில் போட்டியிடும் வேட்பாளர் எம். உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டுமாயின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கரங்களை மக்கள் பலப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு புறநகர்ப் பகுதியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்தும் குரல்கொடுத்து அம்மக்களின் இருப்பினைப் பாதுகாத்து வருகின்ற ஒரேயொரு கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பே என அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும், நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கில் பல தமிழ் கட்சிகள் போட்டியிட்டாலும் கூட்டமைப்பைத் தவிர்ந்த ஏனைய கட்சிகள் அனைத்துமே பேரினவாத கட்சிகளின் பங்காளி அல்லது ஆதரவுக் கட்சிகளாகவேதான் களமிறங்கியுள்ளன என்று கூறினார்.
இது தமிழ் மக்களின் ஒற்றுமையை சிதறடிப்பதற்கான பேரினவாத நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதி என்பதை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தற்போதுள்ள அரச கட்சியானது வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களை மேலும் அடக்கி ஒடுக்க நினைக்கின்றது என்றும் இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களின் அமோக ஆதரவுடன் பகிரங்கமாக எதிர்க்கும் என்றும் அவர் சூளுரைத்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினை எப்படியாவது பலவீனப்படுத்த வேண்டும் என பல சூழ்ச்சிகளை இலங்கைப் பேரினவாத அரசாங்கம் மேற்கொண்டாலும் அவை பயனளிக்கவில்லை என்று கூறிய உதயகுமார் என்னதான் பிரயத்தனங்களைச் செய்தாலும் தமிழ் மக்களிடம் இருந்து கூட்டமைப்பினை யாராலும் பிரிக்க முடியாது எனத் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை