இறுதிக் கட்டத்தின்போதும் விடுதலைப் புலிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் எதிர்மறையான கருத்தைச் சொல்லவில்லை… (ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் – க.துளசி

யுத்தம் மௌனிக்கின்ற தருவாயில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விடுதலைப் புலிகள் அமைப்பானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் எதிர்மறையான செய்தியினைத் தெரிவிக்கவில்லை. ஆயுதம் மெளிக்கப்பட்டதற்குப் பின்பும் தமிழ் மக்களின் அரசியல் பலம் பெற்றிருக்க வேண்டும் என்பதே அதன் நிலைப்பாடு என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்தார்.

இன்று (22) திருகோணமலையில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுடனான சந்திப்பின் பின்னர் இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களுக்குரிய கௌரவமான தீர்வைப் பெற்றுக் கொண்டு அதனூடாக அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சம்பந்தன் ஐயாவின் வழிநடத்தலின் கீழ் செயற்பட்டுக் கொண்டு வருகின்றது. தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக அரசியல் செய்து கொண்டிருப்பவர்கள் ஒருபோதும் தமிழர்களுக்கான மாற்று அரசியலைச் செய்வதாக இல்லை. மாறாக அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை விமர்சிப்பதையே அவர்கள் அரசியலாகச் செய்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் தமிழ் மக்களுக்கான மாற்று அரசியல் என்பதற்கான தகுதியை பெற்றுக் கொள்ள முடியாது.

குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு இணைந்து பயணித்தவர்களே கூட்டமைப்பிலிருந்து வெளியில் வந்தபின்பு கூட்டமைப்பினைக் குற்றம்சாட்டும் வேலையைச் செய்து கொண்டிருக்கின்றனர்.

அவ்வாறு குற்றம் சாட்டுபவர்கள் அனைவருக்குமாக பேராளிகள் என்ற ரீதியில் நாங்கள் ஒரு விடயத்தினைச் சொல்லுகின்றோம். யுத்தம் மௌனிக்கின்ற தருவாயில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விடுதலைப் புலிகள் அமைப்பானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் எதிர்மறையான செய்தியினைத் தெரிவிக்கவில்லை. ஆயுதம் மெளிக்கப்பட்டதற்குப் பின்பும் தமிழ் மக்களின் அரசியல் பலம் பெற்றிருக்க வேண்டும் என்பதற்காகப் போராளிகள் சரணடைய வைக்கப்பட்டார்கள். அவர்கள் தொடர்ந்தும் அரசியற் பணியாற்றுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்திருக்கின்றார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், தமிழர்களின் ஒட்டுமொத்த ஜனநாயகத் தலைமையாகவே சம்பந்தன் ஐயா உள்ளார். அவ்வாறானதொரு பதவிநிலையில் இருந்து கொண்டு சர்வதேச நாடுகள், இலங்கை அரசாங்கம் போன்ற பல்வேறு தரப்புகளுடன் பேச வேண்டிய நிலைமை ஏற்படும். இலங்கைக்குள் ஒரு தீர்வைப் பெற்றுக் கொள்ள வேண்டும். சர்வதேச நாடுகளை ஒரு நிர்ப்பந்தத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்கின்ற பல பிரச்சினைகள் எமது மக்கள் மத்தியில் உள்ளன. இவ்வாறு இருக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டது என்ற சொல்லை மாத்திரம் வைத்துக் கொண்டு அதனைத் துருவித் துருவிக் கேட்பதன் மூலம் மக்களுக்குச் செய்யப் போகின்ற நன்மை என்ன என்பதை சிந்திக்க வேண்டும். இது இப்போதைக்குத் தேவையான கேள்வியாகத் தென்படவில்லை.

அனைவருக்கும் தெரியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரால் உருவாக்கப்பட்டது என்று. சம்பந்தன் ஐயா விடுதலைப் புலிகளின் உறுப்பினர் இல்லை. அவர் பேச்சுவார்த்தை மேடைகளுக்குச் செல்லும் போது தான் விடுதலைப் புலிகளால் அனுப்பட்ட பிரதிநிதி என்று சொல்ல முடியாது. அவர் ஒரு ஜனநாயகக் கட்டமைப்பின் தலைவர். எமது மக்களுக்கு நிறைய வேலைகள் செய்ய வேண்டி இருக்கின்றது.

நாங்கள் தற்போது ஒரு இக்கட்டான நிலைமையில் இருக்கின்றோம். சிங்கள தேசம் தனித்து ஒரு ஜனாதிபதியை அமைத்துள்ளது. எனவே இந்த ஜனாதிபதி தலைமையில் தமிழர்களுக்கான ஒரு தீர்வு வழங்கப்பட வேண்டும். இந்தத் தருணத்தில் நாங்கள் நியாயமான தீர்வை நோக்கி நகர்வதற்கு சம்பந்தன் ஐயா தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற அணியை வலுவுள்ளதாக 20க்கும் மேற்பட்ட ஆசனங்களைப் பெற்று அனுப்பி எமது தீர்வு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

எனவே இணையத்தளம் பார்க்கத்தெரிந்த சிறு பிள்ளைகளுக்குக் கூடத் தெரியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றி. எனவே இந்தத் தருணத்துடன் இவ்வாறான கேள்விகளுக்கான முற்றுப்புள்ளியை இடுவோம் என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.