தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோற்கடிக்கப்பட்டால் அது ஒட்டுமொத்த தமிழினத்திற்கே தோல்வி- கருணாகரம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோற்கடிக்கப்பட்டால் அது ஒட்டுமொத்த தமிழினத்தின் தோல்வியாகவே அமையும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வாக்கு என்பது பீரங்கி குண்டை விட சக்திவாய்ந்தது எனவும் யாருக்கும் தெரியாமல் இடுகின்ற புள்ளடியினால் பலமாற்றங்களைச் செய்யமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு, தேற்றாத்தீவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்..

இதன்போது அவர் உரையாற்றுகையில், “மட்டக்களப்பு மாவட்டத்தில் 38 குழுக்கள் ஊடாக 304 வேட்பாளர்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இதில் பல கட்சிகளும் வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களும் பேரினவாத சக்திகளினால் இங்கு இறக்கிவிடப்பட்டுள்ளார்கள் என்பது வெளிப்படையான உண்மையாகும்.

தமிழர்களின் வாக்குகளைப் பிரிக்கவேண்டும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்கும் ஆசனங்களைக் குறைக்கவேண்டும் என்பதற்காகவே இவர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

கடந்த காலத்தில் அரசாங்க அதிகாரிகளை மிகவும் கேவலமான முறையில் விமர்சித்த அம்பிட்டிய சுமனரத்ன தேரர்கூட மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றார் என்றால் அது தொடர்பாக தமிழ் மக்கள் சிந்திக்கவேண்டும்.

தமிழ் மக்களின் அரசியல் குரலாக இருக்கவேண்டும் என்பதற்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. முன்னர் இயக்கங்களிடையே பல முரண்பாடுகள் இருந்தாலும் கடந்தகால கசப்பான சம்பங்களை மறந்து ஒற்றுமையாக தமிழ் மக்களுக்காக போராடுவோம் என்ற ரீதியில் இந்தக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொடக்கம் தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டதன் காரணமாக அகிம்சை ரீதியாகப் போராடிய இந்த தலைவர்கள் அதில்தோற்றதன் காரணமாக ஆயுதப் போராட்டத்திற்கு வழிவகுத்தது. அந்த ஆயுதப் போராட்டமும் 2009ஆம் ஆண்டுடன் மௌனிக்கப்பட்டது.

அன்று தொடக்கம் இன்றுவரையில் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக, தமிழ் மக்களின் குரலாக, தமிழ் மக்களுக்கு இன்னல் நேரும்போது அதனை தட்டிக்கேட்கும் சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே செயற்படுகின்றது.

இந்நிலையில், தமிழ் பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை தோற்கடிப்பதற்கு தமிழர்கள் சிலரும் இந்த பெரும்பான்மை கட்சிகளுடன் கைகோர்த்திருப்பதுதான் வெட்கப்படவேண்டிய விடயம்.

தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பெற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலை இல்லை. அதனை நிரூபிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு தேவைப்பட்டால் அந்தவேளையில் பலமான சக்தியாக கூட்டமைப்பு திகழுமானால் சில விடயங்களை சாதித்துக்கொள்ள முடியும்.

வாக்கு என்பது பீரங்கிக் குண்டை விட வலிமையானது. அனைத்து படைகளையும் நாங்கள் கொண்டிருந்தபோதும் எமக்கான தீர்வினைப் பெறமுடியவில்லை. ஆனால் யாருக்கும் தெரியாமல் இடப்படுகின்ற புள்ளடியினால் பலமாற்றங்களைச் செய்யமுடியும்” என்று குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.