போராட்டத்தினை பலவீனப்படுத்தியது போன்று தமிழ் தேசியத்தினையும் தோற்கடிக்க கருணா முயற்சி !

விடுதலைப் போராட்டத்தினை பலவீனப்படுத்தி தோல்வி அடையச்செய்தது போன்று தமிழ் தேசியத்தினையும் தோற்கடிக்கும் வகையிலேயே கருணாவின் பிரச்சாரம் காணப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு  நாடாளுமன்ற வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில், இன்று (வியாழக்கிழமை) காலை அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “எந்தவொரு தேர்தலும் நீதியாக,நியாயமாக நடைபெறவேண்டும்.அதனையே நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.தேர்தல் களத்தினைப்பொறுத்தவரையில் தமிழர்களின் வாக்குகளை சிதறடிப்பதன் மூலமாக தமிழர்களின் பிரதிநித்துவத்தினை குறைத்துவிடவேண்டுமென்ற அடிப்படையில் அதிகளவானோர் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்தேசிய கட்சியின் வாக்குப்பலத்தினை குறைப்பதன் மூலமாக தமிழர்களின் பிரதிநிதித்துவத்தினை குறைப்பதற்காக ஆறு ஏழு அணியினர் இறக்குமதிசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த காலத்தில் வடகிழக்கில் உள்ள மக்கள் பொதுஜனப்பெரமுன கட்சியை நிராகரித்திருந்தார்கள்.நிராகரிக்கப்பட்ட இந்த கட்சியினை தூக்கி நிறுத்துவதற்காக எட்டுப்பேர் கொண்ட அணியினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.இவர்கள் கூட தேர்தலை நியாயமான ரீதியில் எதிர்கொள்கின்றார்களா என்ற சந்தேகம் நிலவுகின்றது.அவர்கள் போகும் இடங்களில் மக்கள் எதிர்ப்பினை காட்டும்போது அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதேபோன்று எமது வாக்குகளை சிதறடிப்பதன் மூலமாக இன்னுமொரு சமூகத்திற்கு அந்த பிரதிநித்துவத்தினை பெற்றுக்கொடுக்கும் வகையில் மிகவும் சூழ்ச்சிகரமான முறையில் செயல்படுகின்றார்கள்.

தமிழ் மக்கள் இந்த காலத்தில் உணர்ந்துசெயற்படவேண்டும்.கடந்த காலத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தினை நாங்கள் பெற்றுத்தந்துள்ளோம்.அதன் அடிப்படையில் சோரம்போகாத வகையில் நாங்கள் செயற்பட்டிருக்கின்றோம்.கடந்த காலத்தில் ஒரு சில விதிவிலக்குகள் சோரம்போயிருந்தாலும் கூட 16பேரில் 15பேர் சோரம்போகாதவர்களாகவே செயற்பட்டனர்.

தமிழ் மக்களினால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளரை ஆதரித்தவர்கள் மீண்டும் தேர்தல் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் தமிழ் மக்களை மீண்டும் ஏமாற்றுவதற்காக பசப்பு வார்த்தைகளையும் போலி வாக்குறுதிகளையும் வழங்கிக்கொண்டிருக்கின்றனர்.இந்த தேர்தலில் ஜீவமரண போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.தாங்கல் வெல்லமுடியாது என்று தெரிந்தும்செயற்படுகின்றனர்.

தமிழ் மக்கள் தோல்வியடையப்போகின்றவர்களுக்கும், கொள்கையற்றவர்களுக்கும் அடாவடித்தனமாக அரசியலை விரும்புகின்றவர்களுக்கும் ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக:கும் வாக்களிப்பதன் ஊடாக தமிழ் மக்கள் பிரதிநிதித்துவத்தினைபெறமுடியாது.இழப்பினை எதிர்கொள்ளும் சூழ்நிலையே ஏற்படும்.

எனவேதான் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை நான்கு ஆசனங்களைப்பெறவேண்டும்.

கருணாவின் பிரச்சாரம் எவ்வாறானது என்று தமிழ் மக்களுக்கு தெரியும்.அவர் வெற்றிபெறப்போவதில்லையென்பதும் மக்களுக்கு தெரியும்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளை தமிழ் மக்களில் இருந்து பிரிப்பதற்காக சிங்கள பேரினவாதம் பயன்படுத்தும் ஒரு உத்தியே கருணா.தமிழ் மக்கள் தெளிவாக புரிந்துகொண்டு அவரை நிராகரிப்பார்கள்.

கடந்த காலத்தில் விடுதலைப்போராட்டத்தினை ஒரு வகையில் பலயீனப்படுத்தி தோல்வியடையச்செய்வதற்கு காரணகர்த்தாவாக இருந்த கருணா,அன்று விடுதலைப்போராட்டத்தினை பலவீனப்படுத்தியதுபோன்று தமிழ்த் தேசியத்தினையும் தோல்வியடையச்செய்யும் வகையிலேயே அவரது பிரசார நடவடிக்கைகள் காணப்படுகின்றன

கிழக்கு மாகாணத்தில் எந்த மாவட்டத்திலும் கருணா சார்ந்தவர்கள் வெற்றிபெறுவதற்கான சந்தர்ப்பம் அடியோடு இல்லை.தமிழர்களின் பிரதிநிதித்துவத்தினை பறித்து பேரினவாதிகளிடம் ஒப்படைப்பதன் மூலமாக அவர்களின் ஏவலைசெய்துமுடித்த ஓரு கூலியாளாவே அவரை பார்க்கமுடியும்.கருணாவின் பிரச்சாரங்கள் தமிழ் மக்களை பலவீனப்படுத்துகின்ற பிரச்சாரம்.அவரால் ஒருபோதும் வெற்றிபெறமுடியாது.

0Shares

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.