இதய சுத்தியுடன் கை சுத்தமாக மக்களுக்கு சேவை செய்துள்ளேன் – சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா

எங்கள் நிலங்கள் தக்கவைக்கப்படபோகின்றதா ஆக்கிரமிக்கப்படபோகின்றதா என்பதனை 5 ஆம் திகதி வீட்டுக்கு பக்கத்தில் இடும் புள்ளடியிலேயே உள்ளது என வேட்பாளர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்தார்.

வவுனியா கனகராயன்குளம் குறிசுட்டகுளத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், நான்  நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் இதய சுத்தியுடன் கை சுத்தமாக மக்களுக்கு சேவை செய்துள்ளேன். வன்னி தேர்தல் தொகுதியில் உள்ள மூன்று மாவட்டத்திற்கும் சரியான முறையில் சேவைகளை புரிந்துள்ளேன்.

கொழும்பு மாவட்டத்திற்கு அடுத்ததாக அதிகப்படியான வேட்பாளர்கள் வன்னியில் இறக்கி விடப்பட்டுள்ளனர். இதில் வைத்தியர்கள், வலயக்கல்விப்பணிப்பாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் மாற்றுக்கட்சிகளில் களமிறங்கியுள்ளது பெரும் வேதனையான விடயம்.

எங்களுடைய நிலங்கள் பறிபோய்க்கொண்டிருக்கின்றது. இன்னும் நிலங்களை பறித்தெடுப்பதற்கு அரசு எழுத்துருவில் பல சுற்றுநிருபங்களை உருவாக்கி வைத்துள்ளது. அந்த எழுத்துரு கொள்கைகளை செயற்படுத்துவதற்கு இந்த அரசு தேர்தல் களத்தினை உருவாக்கி வைத்துள்ளது.

6 பேரில் 3 பேரே வெல்வார்களானால் எங்களுடைய நிலங்கள் பறிபோவது சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறுவது எவராலும் தடுக்கமுடியாது.

இரண்டு இலட்சத்து இருபதனாயிரம் தமிழ் வாக்காளர்களை கொண்ட வன்னியில் நாங்கள் ஒருமித்து வீட்டுச்சின்னத்திற்கு வாக்களிப்போமானால் வன்னியில் மாற்றுக்கட்சியினர் எவரும் வெல்ல முடியாது.

6 பேரையும் தமிழனாக வென்றெடுக்கக்கூடிய கைங்கரியம் உங்கள் கைகளில் உள்ளது. எங்கள் நிலங்கள் தக்கவைக்கப்படபோகின்றதா ஆக்கிரமிக்கப்படபோகின்றதா என்பதனை 5 ஆம் திகதி வீட்டுக்கு பக்கத்தில் இடும் புள்ளடியிலேயே உள்ளது” என தெரிவித்தார்,

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.