இனவாதிகளின் கொட்டத்தை அடக்க கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் யாழ். மாவட்ட வேட்பாளர் சரவணபவன் கோரிக்கை 

“இனவாதம் இந்த நாட்டில் இருக்கும் வரையில், இலங்கையின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் இனவாதிகள் தீர்மானிக்கும் வரையில் இலங்கைக்கு விமோசனமில்லை. இனவாதிகளின் கரங்களை ஒடுக்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மக்கள் பலப்படுத்த வேண்டும்.”

– இவ்வாறு தெரிவித்தார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன்.

இது தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“கறுப்பு ஜூலை இனக்கலவரமானது மிகவும் கொடியது. தமிழர் நெஞ்சங்களில் இன்னும் ஆறாத வடுவாக உள்ளது. அது இடம்பெற்று 37 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் அதுதந்த காயங்கள் எம்மவர்களின் நெஞ்சங்களை விட்டு இன்னும் அகலவில்லை. இந்த நிலையில் தேசிய பௌத்த புத்திஜீவிகள் சங்க சபையின் தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தேசத்தைக் காத்த இராணுவத்தினர் மீது தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதில் தாக்குதலாக தமிழ் மக்கள் மீது சிங்கள மக்கள் கைவைக்க வேண்டி வந்தது. தமிழர்கள் வன்முறையை நாடினால் வன்முறைதான் பதில் என்பதற்குக் கறுப்பு ஜூலை சான்று என்று தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடந்த காலமும், நிகழ்காலமும், எதிர்காலமும் இத்தகைய தேரர்களாலேயே தீர்மானிக்கப்பட்டது, தீர்மானிக்கப்படுகின்றது, தீர்மானிக்கப்படும். தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவத்தினர் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு அப்பாவித் தமிழர்களை அரக்கத்தனமாக கொன்றொழித்தமை பெருமை பேசும் விடயம் அல்ல.

போர் முடிவுற்ற பின்னர் இன்று தேசியக் கட்சிகள் பலவும் நல்லிணக்கம் என்று வெளிச்சாயம் பூசிக்கொண்டிருக்கையில் இத்தகையவர்களின் கருத்துக்கள் இந்த அரசு இன நல்லிணக்கத்தை எந்த வகையில் பார்க்கின்றது என்பதை ஆழமாகப் புடம்போட்டுக் காட்டுகின்றன.

இத்தகையவர்களின் நிகழ்சி நிரலுக்கு ஏற்ப இயங்கவும், அவர்களின் ஊதுகுழலாகவும் அடிவருடிகளாகவும் செயற்படுவதற்கு இங்கு பல எட்டப்பர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். தேசிய கட்சிகளின் சின்னங்களில் களமிறங்கினால் தமக்குத் தோல்வி கிட்டும் என்று உணர்ந்த அவர்கள் சுயேச்சைகளாகக் களமிறக்கி விடப்பட்டுள்ளனர். அவர்களைத் தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டுள்ள தேசிய கட்சிகளின் வேட்பாளர்களும் தற்போது தம்மை தமிழர்களின் இரட்சகர்கள் போன்று காட்டிக்கொள்ள ஆரம்பித்து விட்டனர். தமிழ் மக்கள் இந்த விடயத்தில் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும்” – என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.