மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை தேர்தல் ஆணைக்குழு உறுதிசெய்ய வேண்டும்- மனித உரிமைகள் ஆணைக்குழு

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், கொரோனா நெருக்கடி காலப்பகுதியில் நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளைப் பாராட்டுக்குரியது என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த 2019 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலின் போது பெறப்பட்ட அனுபவங்கள் மூலமும் கொவிட் – 19 வைரஸ் பரவல் சூழ்நிலையில் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட நடைமுறைகளின்படியும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மனித உரிமைகள் பேணப்படுவதை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு சிலவற்றை பரிந்துரைப்பதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்புக் கட்டளைச் சட்டத்தில் 2 மற்றும் 3ஆவது பிரிவுகளின் கீழ் சுகாதார அமைச்சரால் வெளியிடப்பட்ட கட்டளைகளில் தேர்தல் தினத்தன்று மக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக வாக்களிப்பு நிலையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றித் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

வாக்களித்தல் என்பது மிகமுக்கியமான மனித உரிமையாகும். எனினும் இம்முறை சுகாதார நிலைமை காரணமாக எவருக்கேனும் வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கு இடையூறுகள் ஏற்படலாம். ஆகவே இதனைத் தவிர்ப்பதற்காக மிகத்தெளிவான சுகாதார வழிகாட்டல் நெறிமுறைகளை தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் பணியாளர்களுக்கும் வாக்காளர்களுக்கும் எழுத்துமூலமாகப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அடுத்ததாக, தேர்தலொன்றின் போது வாக்களிப்பதற்கான உரிமை இழக்கப்படுவதற்குக் காரணமாக அமைகின்ற அந்தத் தேர்தலின்போது வாக்களிப்பதற்கான உரிமை கிடைக்கப்பெறும் ஆண்டின் தேருநர் இடாப்பில் எவரேனும் வாக்காளரின் பெயர் நிர்வாகக் குறைப்பாட்டின் காரணமாக உள்ளீர்க்கப்படாதவிடத்து அதுகுறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அவசர தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பது அவசியமாகும்.

அத்தகைய காரணத்தினால் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது வாக்குரிமையை இழந்த வாக்காளர்கள் தொடர்பாக அறியக்கிடைத்துள்ளது. இது நியாயமான தேர்தலொன்றில் தடையை ஏற்படுத்துகின்ற காரணியாகும்.

அனைத்து, விதத்திலான விசேட தேவையுடையோர் வாக்களிப்பதற்காக வருகை தருவதற்குத் தடையாக இருக்கும் பிரவேச சிக்கல்களை நிவர்த்திப்பதுடன் வாக்களிக்கும்போது ஏற்றக்கொள்ளக்கூடிய நடைமுறைகளை உறுதிப்படுத்த வேண்டும். வாக்களித்ததன் பின்னர் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தனர் என்ற தனிப்பட்ட விடயங்களை வெளிக்கொணர்வதற்கான வாய்ப்புக்கள் நீக்கப்பட வேண்டும் என்பதுடன் ஒரு இனம் அல்லது மதத்தைச் சார்ந்த பிரஜைகளுக்குச் சொந்தமான இடங்களை வாக்கெடுப்பு நிலையங்களாகப் பயன்படுத்துவதை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேலும், பூகோள ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் வாக்காளர்களுக்குத் தமது வாக்கினை அளிப்பதற்கு முடியுமான வகையில் வசதியான மற்றும் நடைமுறைச் சாத்தியமான செயன்முறையொன்று தயாரிக்கப்பட வேண்டும். பிக்குணிகளுக்குத் தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் முறையில் சிக்கலொன்று நிலவுவதனால் அதற்கான நடைமுறைச் சாத்தியமான மாற்றுவழிமுறையாகத் தேர்தலுக்காகத் தயாரிக்கப்பட்ட விசேட அடையாள அட்டையில் பொதுவாகக் குறிப்பிடுதல் ஊடாகப் பிக்குணிமாருக்கும் தமது வாக்கினை அளிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க முடியும்.

சமய பெரஹராக்கள், சமய வைபவங்கள் ஆகியவை பாரம்பரியமாக நடத்தப்படாத காலப்பகுதிகளில் தேர்தலை இலக்காகக்கொண்டு தேர்தல் ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்காக சமய பெரஹராக்கள், சமய வைபவங்களை ஏற்பாடு செய்வது தவிர்க்கப்பட வேண்டும். பெரஹராக்கள், வாகன ஊர்வலங்கள், சம்பந்தமாக தேர்தல் சட்டங்கள் தேர்தலுக்குப் பின்னர் கண்டிப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

தேர்தல் காலத்தில் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் நோக்கம் வாக்காளர்களின் வருகையைத் தடுப்பதற்கன்றி சுதந்திரமானதும் நீதியானதும் அழுத்தங்களற்ற நிலைமையில் தேர்தலை நடத்துவதாகும். அதற்குரிய நடவடிக்கைகளையும் தேர்தலின் பின்னர் தோல்வியுற்ற கட்சியின் ஆதரவாளர்களுக்கு அரச நிறுவனங்களில் துன்புறுத்தல் மேற்கொள்ளப்படுவதைத் தடுப்பதற்குமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.