வன்னிமக்களின் முன்னேற்றம் பற்றிய எண்ணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இல்லையாம்! பொதுஜனபெரமுன வேட்பாளர் ஜனக நந்தகுமார்
- வவுனியா நிருபர் –
வன்னி மக்கள் முன்னேற வேண்டும் என்ற எண்ணமானது இங்குள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் இல்லை. அதனாலேயே வன்னியில் மக்கள் கஸ்ரங்களை எதிர்நோக்குவதாக பொதுஜன பெரமுன கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் ஜனக நந்தகுமார தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வன்னி பிரதேசத்திற்கு வந்ததும் வன்னி மக்களது பிரச்சனைகள் தொடர்பில் அறிந்து கொண்டேன். அந்த மக்களின் கஸ்ரங்களும், அவர்களது அப்பாவித் தனமும் அவர்களது தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டியது. கூடுதலான வீடுகளில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் குருதி மாற்றுவதற்கு கூட பணம் இல்லாது கஸ்ரப்படுகிறார்கள். குடிப்பதற்கு சுத்தமான நீர் இல்லை. வீடுகள் கூட மாட்டுக் கொட்டகைகள் மாதிரி பூரணப்படுத்தப்படாமல் உள்ளது. அந்த வீடுகளில் சரியான மலசலகூடம், சமையலறை என்பன இல்லை. இதனை கருத்தில் கொண்டு குடிநீர் வசதிகள் பலவற்றை செய்து கொடுத்ததுடன், சுயதொழில் மற்றும் வாழ்வாதாரத்திற்கான உதவிகளையும் வழங்கியிருந்தேன்.
மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருந்திருந்தால் வன்னி மக்களின் பிரச்சனைகளில் 70 வீதமான பிரச்சனைகள் தீர்ந்திருக்கும். மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் மக்களுக்காக அவர் செய்ய இருந்த வேலைத்திட்டங்களை இல்லாமல் ஆக்கியுள்ளார்கள். மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் இந்த நாட்டை 2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன அவர்களிடமும், ரணில் விக்கிரமசிங்க அவர்களிடமும் கையளித்த போது நாட்டின் மக்கள் அனைவரும் பலமானவர்களாகவே இருந்தார்கள். ஆனால் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் செய்தது மத்திய வங்கியில் கொள்ளையடித்தது மட்டுமே. ஐக்கிய தேசிய கட்சிகாரர்கள் அந்த மோசமான வேலையை செய்துள்ளார்கள்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் இருக்கும் நண்பர்களுடன் நானும் பழகியிருக்கின்றேன். அரசாங்கத்தால் கொடுக்கப்படும் அமைச்சுப் பதவியைப் பெற்று மக்களுக்கு தேவையான வேலைகளைச் செய்ய தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு விருப்பம் இல்லை. வன்னியில் வாழும் மக்களை அதே நிலையில் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்பதே கூட்டமைப்பின் விருப்பம். தேர்தல் காலங்களில் கிராமங்களுக்கு சென்று இனவாதம், மதவாதம் என்பவற்றை தூண்டி விட்டு மக்களின் வாக்குகளைப் பெறுவதே அவர்களின் வேலையாக இருந்தது.
இங்குள்ள இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து, அவர்களது கையில் பணம் வந்து, அவர்கள் நாட்டறிவு, உலக அறிவு என்பவற்றை பெற்று முன்னேறி விடுவார்கள் என்ற பயம் கூட்டமைப்புக்கு இருக்கிறது. அதனால் தான் இளைஞர், யுவதிகளை இதே நிலையில் வைத்திருக்க இங்குள்ள தலைவர்கள் விரும்புகிறார்கள். வேறு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் சென்றதும் யாராவது அமைச்சுப் பதவி தருவார்களா என தேடிக் கொண்டிருக்கும் போது இங்குள்ள தமிழ் தலைவர்கள் பாராளுமன்றம் சென்றதும் அமைச்சு பதவி கொடுத்தும் வாங்காமல் இருப்பதற்கான காரணம் இது தான். அவர்களுக்கு தமிழ் மக்கள் முன்னேறி விடக் கூடாது. அவர்களது பிரச்சனை தீர்க்கப்படக் கூடாது என்பது தான் நோக்கம். அதனை வைத்து அரசியல் செய்து வாக்கு பெறுவதே அவர்களின் திட்டம். எனகவே மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை