எந்தச் சக்தியாலும் ஐ.தே.கவை  ஒருபோதும் அழிக்கவே முடியாது – ரணில் திட்டவட்டம்

 “ஐக்கிய தேசியக் கட்சி அழிந்துபோய்விட்டது எனச் சிலர் கூறுகின்றனர். பண்டாரநாயக்கவும் கட்சியிலிருந்து விலகியபோது அவ்வாறுதான் கூறினார். இறுதியில் அவருடைய கட்சியினரே அவரைக் கொன்றுவிட்டார்கள். எனவே, ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் இல்லாமல்போகாது; எந்தச் சக்தியாலும் எமது கட்சியை அழிக்க முடியாது.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

வெல்லவாய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-

“இம்முறை நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தல் மிகவும் வித்தியாசமானதொரு தேர்தலாகும். ஏனெனில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இடம்பெறும் தேர்தல் என்பதால் பாரிய பரப்புரைக் கூட்டங்களை நடத்த முடியாது.

ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து சுமார் 9 மாதகாலத்தின் பின்னரே மீண்டும் மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கப் போகின்றார்கள். புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியாலும், அவரால் நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அமைச்சரவையாலும் நாட்டில் திடீரென்று ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடி என்பவற்றுக்கு முகங்கொடுக்க இயலாமல்போயுள்ளது.

ஆரம்பத்தில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் எவருமில்லை என்று அரசு பொய்யுரைத்தது. அதன் பின்னர் தற்போதுவரை வைரஸ் தொற்றுக்குள்ளான சுமார் 2 ஆயிரத்து 700 இற்கும் அதிகமான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

இன்னும் சமூகத்தில் எத்தனை தொற்றாளர்கள் இருக்கின்றார்கள், எத்தனை பேர் அறிகுறிகளைக் கூறாமல் மறைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி எமக்குத் தெரியவில்லை.

அதேபோன்று இந்த நெருக்கடி ஏற்பட்டதும் மறுபக்கம் பொருளாதாரம் அதனை எதிர்கொள்ள முடியாமல் வெகுவாகத் தளம்பல் அடைந்திருக்கின்றது. இதனால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நிவாரணமளிக்கும் வகையிலான ஆக்கபூர்வமான செயற்றிட்டங்கள் எதனையும் அரசு நடைமுறைப்படுத்தவில்லை.

இத்தகையதொரு சூழ்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குச் சவாலாகக் களமிறங்கியிருக்கும் நாம் பொருளாதாரத்தை மீண்டும் சீரமைப்போம். எனவே, அதற்கான வாய்ப்பை ஒருமுறை எமக்கு வழங்குங்கள் என்றே மக்களிடம் கோருகின்றோம்.

எதிர்வரும் ஒன்றிரண்டு வருடங்களில் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான கொள்கைகளை மாத்திரமன்றி, அவற்றுக்கான செயற்றிட்டங்களையும் நாம் முன்வைத்திருக்கின்றோம்.

சிலர் தமக்கு இம்முறை எதிர்க்கட்சித் தலைமையைப் பெற்றுத்தருமாறும், அடுத்தமுறை ஆட்சியமைப்பதற்கு வாய்ப்புத்தருமாறும் மக்களிடம் கோருகின்றனர். ஆனால், நாட்டைப் பாதுகாப்பதற்காகவே டீ.எஸ்.சேனாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்கினார். அந்த நோக்கத்தை முன்நிறுத்தியே ஆட்சியமைப்பதற்கான ஆணையை வழங்குமாறு வலியுறுத்துகின்றோம். மக்கள் ஆணை வழங்கினால் அரசை அமைப்போம். அன்றேல் எதிரணியாக செயற்படுவோம்.

தற்போது இரண்டு ஐக்கிய தேசியக் கட்சி இருக்கின்றது எனவும் சிலர் கூறுகின்றனர். அதற்காக அனைத்து வகையான நீதிமன்றங்களுக்கும் சென்று, அதில் தோல்வியடைந்துவிட்டனர். இந்த விடயத்தில் அவர்கள் சர்வதேச நீதிமன்றத்துக்குச் செல்வதாக இருந்தாலும்கூட, நாம் தடுக்கப்போவதில்லை.

கடவுச்சீட்டைப் பெற்றுத்தருவதற்கும் தயாராகவே இருக்கின்றோம். ஆனால், இறுதியாக வழமைபோன்று ஐக்கிய மக்கள் சக்தி என்பது அங்கீகரிக்கப்பட்ட தனியொரு கட்சி என்றும், அது ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணியல்ல என்றுமே தீர்ப்பு வழங்கப்படும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

ஐக்கிய தேசியக் கட்சி என்பது டி.எஸ்.சேனாநாயக்க தொடக்கம் பல்வேறு மூத்த தலைவர்களினால் வழிநடத்தப்பட்ட நீண்ட பாரம்பரியத்தையுடைய கட்சியாகும். ஐக்கிய மக்கள் சக்தி என்பது அதன் ஓரங்கம் அல்ல. அது மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி போன்று வேறொரு தனியான கட்சியாகும். எனவே, அவர்கள் சிறிகொத்தாவுக்கு வந்தால் நான் அவர்களைப் பொலிஸாரிடம்தான் கையளிப்பேன்.

எனவே, எவரும் இரண்டு கட்சிகளிலும் அங்கம் வகிக்க முடியாது. நீங்கள் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர் என்று இங்கிருக்கலாம். இல்லாவிட்டால் வேறு கட்சிக்குச் செல்லலாம். ஐக்கிய தேசியக் கட்சியை இல்லாமல் செய்வதைத் தமது நோக்கமாகக் கொண்டவர்கள் வேறு கட்சியில் இணையவோ அல்லது வேறு கட்சிக்கு ஆதரவளிக்கவோ முடியும்.

ஐக்கிய தேசியக் கட்சி அழிந்துபோய்விட்டது எனவும் சிலர் கூறுகின்றனர். பண்டாரநாயக்கவும் கட்சியிலிருந்து விலகியபோது அவ்வாறுதான் கூறினார். இறுதியில் அவருடைய கட்சியினரே அவரைக் கொன்றுவிட்டார்கள். எனவே, ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் இல்லாமல்போகாது; எந்தச் சக்தியாலும் எமது கட்சியை அழிக்க முடியாது.  ” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.