பாடசாலைகள் நாளை முதல் மீள ஆரம்பம்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விடுமுறையளிக்கப்பட்டிருந்த பாடசாலைகளை நாளை (திங்கட்கிழமை) முதல் மீள திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாளைய தினம் 5ஆம் 11ஆம் தர மாணவர்கள் மற்றும் உயர்தர தரங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் மாத்திரமே பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படவுள்ளனர் என அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ஏனைய தரத்தில் பயிலும் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் தேர்தலுக்குப் பின்னர், ஓகஸ்ட் 10 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் பொதுத்தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகளை தயார்படுத்துவதற்காக குறித்த பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் உப அதிபர்கள் எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை பாடசாலைகளுக்கு சமூகமளிக்க வேண்டும் என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நாட்களில் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தேர்தல் பணிகளை முன்னெடுக்குமாறும் அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.