தமிழ் மக்களின் தேசிய தலைவர்கள் இனப்படுகொலையின் போது எங்கே போனார்கள்- விஜயகலா கேள்வி

தமிழ் மக்களின் தேசிய தலைவர் என தம்மை கூறிக்கொள்பவர்கள் வன்னியில் இறுதி யுத்தத்தில் மக்கள் இனப்படுகொலை செய்யப்படும்போது எங்கே போனார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பருத்தித்துறையில் இடம்பெற்ற  தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கூட்டத்தில் விஜயகலா மகேஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “இறுதி யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது  நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்கள் அன்று தமது பதவியினை இராஜினாமா செய்திருந்தால் அரசாங்கத்திற்கு ஒரு பேரிடியாக இருந்திருக்கும். மக்களும் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்.

நான் ஒன்றைக் கேட்க விரும்புகின்றேன் இவர்களெல்லாம் தமிழ் மக்களின் நலனிற்காக தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால் ஏன் இவ்வாறு கட்சிகளாக பிரிந்து வாக்குகளை சிதறடிப்பற்கு செயற்படுகின்றார்கள்.

அத்தோடு சிலர் தம்மை தேசியத் தலைவர் என்று கூறித் திரிகிறார்கள். இவர்களெல்லாம் வன்னியில் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் நடைபெற்ற போது எங்கே இருந்தார்கள்.

மேலும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த சிலர், விடுமுறை எடுத்துக்கொண்டு வெளிநாடுகளில் தங்கியிருந்தார்கள்.

அவ்வாறு தமது சுயலாப அரசியல் செய்வதற்காகவே இங்கே வாக்கு கேட்டு வருகின்றார்கள். எனவே மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும்

ஐக்கிய தேசியக் கட்சியை பொறுத்த வரைக்கும் இரண்டு முறை எமது தலைவர் பிரதமராக இருந்த போது, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு  பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டார்.

எனவே ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலே நமக்கு உரிய தீர்வு கிடைக்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.