கஜேந்திரகுமாரும் விக்னேஸ்வரனும் ஒரே நிகழ்ச்சி நிரலில் இயங்குகின்றனர் – ஜனநாயகப் போராளிகள் விசனம்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகிய இருவரும் ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்குகின்றார்கள் என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் க.துளசி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு துளசி மேலும் தெரிவிக்கையில், ‘தமிழர்கள் இன்று தமது தனித்துவத்தை இழந்து, பயணித்துக்கொண்டிருக்கின்றோம். தற்போது வந்துள்ள கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம், தமிழர்களுக்கு ஆற்றியிருக்கின்ற பணிகளின் நிமித்தம், தமிழர்களுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுத்தர வேண்டிய கடப்பாடு கோட்டாபய அரசாங்கத்திற்கு இருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்க வேண்டுமாயின், மாற்றுத்தலைமை ஒன்றை உருவாக்குவதற்கு சிங்கள தேசம் நினைத்துள்ளது. அதன் பிரகாரம் தான், முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வெளியில் வந்து நிற்கின்றார்.

தயவு செய்து மக்களை திசை திருப்பி, மக்களின் வாக்குப் பலத்தை திசை திருப்பும் வேலையை நீங்கள் செய்ய வேண்டாம். கடந்த காலங்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வழங்கப்பட்ட பணி என்ன?

வெள்ளைக்கொடி விவகாரம் பற்றி இன்று வெளியில் வந்து விடுதலைப் புலிகள் உங்களுடன் இருந்ததாக சொல்கின்றீர்கள், நீங்கள் எவற்றைக் கதைத்தீர்கள் என்பது எமக்குத் தெரியும். நாங்கள் உங்களுடன் என்னத்தைக் கதைத்தோம் என்று உங்களுக்கும் தெரியும்.

நாங்கள் உங்களுடன் கதைத்திருக்கின்றோம் என்றால், நாங்கள் யுத்தத்தின் இறுதியில் சம்பந்தன் அவர்களுடன் கதைத்திருக்கமாட்டோம் என்று எவ்வாறு சொல்கின்றீர்கள்.

யுத்தம் முடிவடைந்துவிட்டது. விடுதலைப் புலிகள் சார்பாக நாங்கள் அதைச் சொல்கின்றோம். தமிழர்கள் தனித்துவமான இனம். தமிழர்களுக்கு யார் தலைவராவது என்பதே இங்குள்ள பிரச்சினை. தலைவர் பிரகாரனின் பின்னர், யார் அந்த முடியைச் சூடுவது என்பதே இங்குள்ள பிரச்சினை. ஒரு வருடத்தின் பின்னர், கஜேந்திரகுமார் ‘நான் தான் தலைவர்’ என்று தனது தலையைக் காட்டிவிட்டார். அதற்குத் தகுதி வேண்டும். தலைவர் ஆக வேண்டுமாயின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கும் போது, தலைவர் உங்களை (கஜேந்திரகுமாரை) தலைவர் ஆக்கியிருப்பார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அடுத்தாக நீதியரசராக இருந்த ஒரு மனிதரை நம்பிக்கொண்டு வந்தார். அவர் அப்போது தான், யாழ்ப்பாணத்திற்கு வந்தார். அதற்கு முன்னர் கோவில் கும்பிடவந்து போன ஒருவர் தான் சீ.வி.விக்னேஸ்வரன்.

‘தம்பி பிரபாகரன்’ என்றே சொல்வார் சீ.வி.விக்னேஸ்வரன், தலைவர் பிரபாகரன் என்று சொல்லமாட்டார். கஜேந்திரகுமார் மற்றும் சீ.வி.விக்னேஸ்வரன் இருவரும் ஒரு நிகழ்ச்சி நிரலில் இயங்குகின்றார்கள். யார் தலைவர் ஆகுவதென்று ஒரு போட்டி காணப்படுகின்றது. தலைவர் ஆகுவதற்கு சில தகுதிகள் உள்ளன’ என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.