தமிழர் பிரதிநிதித்துவத்தை அம்பாறையில் இல்லாமலாக்குவதே கருணாவின் நோக்கம்! ஜனநாயகப் போராளி துளசி காட்டம்
அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் வாக்குகளை பிரித்து அங்கு தமிழர் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்துவிட்டு அதாவுல்லாவை கொண்டு வருவதே கருணா அம்மானின் வேலைத்திட்டம் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்தார்.
இன்று வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் விக்னேஸ்வரன், சிவாஜிலிங்கம் ஆகியோர் முன்வைத்த கருத்துக்கள் தொடர்பிலும் பதிலளித்தார்.
இவை தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாம் ஐனநாயக அரசியலுக்கு வந்த பிறகு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து வருகின்றோம் குறிப்பாக மகிந்த, கோட்டாபய, ரணில் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் போன்ற பலரை நாம் சந்தித்திருக்கின்றோம்.
இந்த இடத்தில் விக்கினேஸ்வரனிடம் ஒரு கேள்வியை முன் வைக்கின்றேன். கடந்த ஐனாதிபதி தேர்தலில் ஐனநாயக போராளிகள் கட்சி கோட்டாபயவை ஆதரித்ததாக எந்த விதமான சாட்சிகள், ஆதாரங்கள் இன்றி தீர்ப்பு வழங்கியுள்ளீர்கள். நாங்கள் ஆதரித்தது ரணில் தலைமையிலான சஜித் பிரேமதாசவை என்று ஊடகங்கள் மற்றும் பொதுமக்களிற்கு நன்கு தெரியும். இந்தக் கருத்தானது கடந்த காலத்தில் நீங்கள் வழங்கிய நீதிமன்ற தீர்ப்புக்களையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
எனவே அவரது கடந்தகால தீர்ப்புக்கள் தொடர்பாக நீதிச்சேவைகள் ஆணைக்குழு ஆராயவேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றேன்.
வடக்கு மாகாணசபைக்கு விக்கினேஸ்வரன் தெரிவு செய்யப்பட்ட பின்னர் மகிந்தவிடம் சென்று பதவி ஏற்றதுடன், தனது குடும்பத்துடன் சென்று அவருடன் புகைப்படம் எடுத்திருந்தார். அப்படியானால் நீங்கள் மகிந்த ராயபக்சவின் ஆளா? நீங்கள் சந்திப்பது அரசியல் சாணக்கியம், ராஜதந்திரம் என்றால் நாங்கள் சந்தித்தால் கோட்டாவின் ஆள் என்று முத்திரை குத்துவீர்களா இது தான் உங்களின் நியாயமா?.
நாம் இந்த மண்ணுக்காக போராடிய போராளிகள். எந்த தரப்பானாலும் எம்மை அழைத்து பேசுவதற்கான தகுதி எமக்குள்ளது. நீங்கள் இத்தேர்தலிலே இணைத்து போட்டியிடும் அணிகளை அவர்கள் வாசலுக்கு கூட எடுக்கமாட்டார்கள். தகுதி தராதரம், மக்கள் மீதான அபிமானம், மக்களிற்கு வழங்கும் சேவைகளை கருத்தில் கொண்டுதான் ஐனாதிபதியும், பிரதமரும் எவரையும் அழைத்துப் பேசுவார்கள் என்பதை கூறிக்கொள்கிறேன்.
வடமாகாண ஆட்சியை 5 வருடங்கள் ஐயாவிற்கு வழங்கினோம். அதற்கு அதிகாரம் இல்லை என்றார். வேலை செய்வதற்கு தன்னை விடவில்லை என்று சொல்லிவிட்டு வெளியில் வந்தார். இவர் நாடாளுமன்றத்திற்கு சென்றும் இதே கதையைதான் சொல்லப்போகின்றார்.
இதே போல அவருக்கு அருகில் இருந்த ஒருவரும் குறுக்காலபோன போராளிகள் என ஒரு கதையை கூறியிருந்தார். நடிகர் திலகம் சிவாஜிலிங்கத்தின் கருத்துக்களுக்கு நாம் பெரியளவில் பதில் அளிக்க விரும்புவதில்லை. சிவாஜி அண்ணன் ஒருநேரம் குழுமாட்டு சந்தியில் நிற்பார். மறுநாள் மன்னார் வீதியில் நிற்பார். அவருக்கு ஒன்றை சொல்லி வைக்க விரும்புகின்றோம். எமது குருதி இந்த மண்ணில் சிந்தப்பட்டிருக்கின்றது. விடுதலைப்போரில் ஆயுதம் ஏந்தி நாம் போராடியிருக்கின்றோம். இந்த நிலையில் நீங்கள் எங்களை குறுக்காலபோன போராளிகள் என்று சொல்கிறீர்கள்.
தலைவர் பிரபாகரன் மக்களை அரவணைத்து ஆயுதப்போராட்டத்தை வழி நடாத்திக்கொண்டு சென்றபோது டெலோவின் பக்கம் சென்றவரே நீங்கள். இன்று மாவீரர்களை பற்றியும் தலைவர்களைப் பற்றியும் எந்த அருகதையுடன் பேசுகின்றீர்கள். நீங்கள் யார்? ஐனாதிபதித் தேர்தல் ஏன் கேட்கிறீர்கள்? என்று எமது மக்களுக்கு தெரியாதா. இனிமேல் போராளிகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது மிகவும் கவனத்துடன் செயற்படுங்கள். போராளிகள் மரக்கறிகடைகளில் வேலை செய்தவர்கள் அல்ல. இறைச்சிக்கடையை வைத்திருந்தவர்கள்.
நீங்கள் செய்து கொண்டிருந்த வேலைகளை எவரும் மறக்கவில்லை. என்ன செய்வது, 2001 ஆம் ஆண்டு உங்கள் அனைவரையும் தலைவர் அழைத்து வந்து வெள்ளையடித்து விட்டார். இன்று 10 வருடங்கள் கழித்து பழையபடி பன்றி போய் சேற்றுக்குள் கிடப்பதுபோல உங்களது விளையாட்டுக்களை காட்டுகின்றீர்கள்.
கருணா வரலாற்று நாயகன் என்றும், அவரை போராளிகளால் ஏற்றுக்கொள்ள முடியுமா என்றும் சிவாஜிலிங்கம் ஒரு கருத்தை சொல்லியிருந்தார். கருணா செய்த காட்டிக்கொடுப்புக்கள், துரோகங்களுக்காக தலைமை செயலகத்தால் கலைக்கப்பட்டவரே கருணா. ஆனால் இந்த பேராட்டம் மௌனிக்கப்படும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிராகரிக்குமாறு தலைவர் சொல்லவில்லை.
கருணா மூவாயிரம் இராணுவத்தை கொல்லவில்லை. கருணா என்ற தனிமனிதனால்தான் இலட்சக்கணக்கான மக்கள் முள்ளிவாய்க்காலில் கொன்றொழிக்கப்பட்டார்கள். இந்த பழி இன்றும் கருணாவுடன் இருக்கின்றது. இன்று போலித்தேசியம் கதைத்துக்கொண்டு தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுத்தருவதாக கூறி அம்பாறையில் அவர் போட்டியிடுகின்றார். தமிழர்களின் வாக்குகளை பிரித்து அங்கு தமிழர் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்துவிட்டு அதாவுல்லாவை கொண்டு வருவதே அவரது வேலைத்திட்டம். அதாவுல்லா வெற்றி பெற்றால் அவருக்கு ஒரு அமைச்சு வழங்கப்படும். இவருக்கு எலும்புத்துண்டை போட்டு தேசியப் பட்டியல் நியமனம் ஒன்று வழங்கப்படும். இதுதான் நடக்கப்போவது என்று தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை