ராஜபக்ஷகளின் கைகளுக்கு ஆட்சி சென்றால் மீண்டும் ஜனநாயகத்தை மீட்டெடுப்பது கடினம்- ராஜித
ராஜபக்ஷகளின் கைகளுக்கு ஆட்சி அதிகாரம் சென்றால் மீண்டும் ஜனநாயகத்தை மீட்டெடுப்பது கடினமென முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக ராஜித சேனாரத்ன மேலும் கூறியுள்ளதாவது, “நல்லாட்சியை ஆரம்பிக்க தலைமை தாங்கிய முக்கிய நபர்கள் அனைவருமே நல்லாட்சியை நாசமாக்கிவிட்டனர்.
நாம் உருவாக்கிய நல்லாட்சியில் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன, மீண்டும் ராஜபக்ஷவின் முகாமில் தஞ்சம் புகுந்து எம்மை நாசமாக்கியதை எம்மால் இன்னமும் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.
அதேபோன்று அர்ஜுன மகேந்திரன் விடயத்திலும் நான் ஆரம்பத்தில் இருந்து முரண்பட்டுக்கொண்டே இருந்தேன். ஆனால் ரணில் அதனை கவனத்தில் கொள்ளவில்லை. தனது அமைச்சின் கீழ் எடுக்கும் தீர்மானத்தை வேறு எவரும் மாற்றியமைக்க வேண்டாம் எனக் கூறினார். அதன் விளைவையே இன்று அனைவரும் அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம்.
இதேவேளை ராஜபக்ஷவையும் அவரது மனைவியையும் காப்பாற்ற ரணில் விக்ரமசிங்வே காரணம். அதேபோன்று கோட்டாபய ராஜபக்ஷவை காப்பாற்றுவதாக மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி கொடுத்திருந்தார்.
இவ்வாறு குற்றவாளிகளை காப்பாற்றியதில் நல்லாட்சி தலைவர்கள் இருவருக்குமே பங்குண்டு. ஆனால் துரோகிகளாக இன்று நாம்தான் அடையாளப்படுத்தப்பட்டுள்ளோம்.
மேலும் ராஜபக்ஷகளின் கைகளுக்கு ஆட்சி அதிகாரம் செல்லுமாக இருந்தால் இன்னும் பல தசாப்தகாலத்துக்கு ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கு போராட வேண்டி ஏற்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை