அரசின் கைகூலிகள் தமிழர்களுக்கு தீர்வு தரப்போகிறார்களாம் – சிறீதரன் காட்டம்

அரசின் கைகூலிகள் தமிழ்ர்களுக்கு தீர்வு தரப்போகிறார்களாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) கண்ணகிநகர் பகுதியில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில், “யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் காணாமற்போகவும் அவர்களில் பலர் கொலை செய்யப்படவும் காரணமாக இருந்தவர்கள் தற்போது தமிழர்களை மீட்பவர்கள் போலவும் தீர்வு பெற்றுத் தரப் போகின்றோம் எனக் கூறியும் தமிழர்களின் மாற்று அணியாக தங்களைக் காட்டிக் கொள்கின்றார்கள்.

மக்களுடைய எண்ணங்கள் சரியானதாக அமைவதற்காகவே, நாங்கள் சரியான சகவாழ்வுடனும், சமயோசித்துடனும் எங்களுடைய அரசியலை செய்து வருகிறோம். ஆனால், சிங்கள பேரினவாதிகளும் அவர்களின் எலும்புத்துண்டை காவித்திரியும் கைக்கூலிகளும், தமிழர்கள் தங்களுக்கென்று தனியான ஆட்சியொன்றை ஏற்படுத்திவிடக்கூடாது என முனைப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.

நாங்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்கான ஆயிரம் ஆயிரம் வீரர்கள் தங்கள் உயிரை கொடுத்து இந்த மண்ணின் விடுதலைக்காக போராடினார்களோ அந்த கிளிநொச்சி, யாழ்ப்பாண மாவட்டங்களில் சில காட்டுப்பூனைகள் இப்போது கரகம் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்.

எங்கள் ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டதன் பின்னர் அரசியல் ரீதியாக ராஜதந்திர ரீதியாக போராடி வருகின்றோம். நம்மவர்கள் ஒட்டுக் குழுக்கள் போல கடந்த காலத்தில் ஆயுதங்களை விரும்பி கையில் எடுத்தவர்கள் அல்ல.

இதனை தமிழீழ விடுதலை போராட்டத்தின் மூத்த போராளியாக பேசப்படுகின்ற தங்கத்துரை, 1983 ஆம் ஆண்டு, நாங்கள் ஆயுதங்கள் மீது காதல் கொண்ட மனநோயாளிகள் அல்ல என்று இலங்கை நீதிமன்றத்தில் கூறினார்.

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் 1985ஆம் ஆண்டு, இந்திய பத்திரிகையாளர் அனித்தா பிரதாப்பிற்கு பேட்டி அளிக்கும் போது, நாங்கள் ஆயுதங்கள் மீது விருப்பம் கொண்டு அவற்றை எடுத்தவர்கள் அல்ல. ஆயதங்கள் எங்கள் மீது திணிக்கப்பட்டன என தெரிவித்தார்.

ஆகவே நாங்களும் இப்போது யாரையும் துப்பாக்கிகளை தூக்குங்கள் என்றும் சொல்லவில்லை. எங்கள் உரிமைகள் வேண்டும் என்றே கேட்கின்றோம் அதனை பெற அரசியல் ரீதியாக போராடிவருகின்றோம் ஆகவே எங்கள் கைகளை பலப்படுத்த வேண்டிய கடமை தமிழர்களாகிய உங்களிடமே உள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.