இலங்கை தமிழ் குடும்பத்தை நாடு கடத்தும் விவகாரம்: அவுஸ்ரேலிய அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு

நாட்டு மக்களின் வரிப்பணம் அவுஸ்ரேலிய உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டனினால் வீணாகின்றதே தவிர பிரியா நடேசன் குடும்பத்தினரினால் அல்லவென சட்டத்தரணி கரினா போர்ட் (Carina Ford) தெரிவித்துள்ளார்.

பிரியா– நடேசன் குடும்பத்தினரால் அவுஸ்ரேலிய அரசுக்கு ஒரு கோடி டொலர் வீணாகியுள்ளது. நாட்டு மக்களின் வரிப்பணமே இவ்வாறு வீணாகியுள்ளது. ஆனாலும்  அவர்கள் நாடு திரும்புவதற்கு எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனரென அமைச்சர் பீற்றர் டட்டன் அண்மையில் தெரிவித்துள்ளார்.

குறித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே பிரியா– நடேசன் குடும்பத்தினரின் சார்பாக வழக்கை முன்னெடுத்துவரும் சட்டத்தரணி கரினா போர்ட் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பீற்றர் டட்டன்தான் பெருந்தொகையான பணத்தை செலவு செய்து, அந்த குடும்பத்தை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.

எனவே மக்களின் வரிப்பணம் வீணாகியமைக்கு பீற்றர் டட்டன் மாத்திரமே முழுமையான காரணமாகும். இதில் வேறு எவருக்கும் பங்கில்லை.

அதேபோன்று பீற்றர் டட்டன், அண்மையில் வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், ப்ரியா– நடேசன் தம்பதியினர் தங்களது குழந்தைகளுக்கு பிழையான உதாரணமுடைய பெற்றோராகிவிடக் கூடாது என கூறியிருந்தார்.

ஆனால், குறித்த குழந்தைகளை கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைத்திருப்பதற்கு உத்தரவை  வழங்கிய அவர், தற்போது  பிரியா– நடேசன் மீது பழி சுமத்துவது ஏற்புடையதல்ல.

மேலும் குறித்த குடும்பத்தினை தடுத்து வைப்பதற்காக நாளொன்றுக்கு 20ஆயிரம் டொலர்கள் செலவில் நிர்வகித்து வருவது யார், என்ற கேள்விகள் ஊடாக பீற்றர் டட்டனின் கேள்விகளுக்கு பதில் கிடைத்துவிடும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.