கந்தகாடு பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது- இராணுவ ஊடகப் பேச்சாளர்
கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளரைத் தொடந்து கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில், அதிகமானவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் இனங்காணப்பட்டனர்.
இதனையடுத்து அவர்களுடன் தொடர்பினை பேணியவர்கள் உள்ளடங்களாக இதுவரை 532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளை பார்வையிடுவதற்காக கடந்த மார்ச் முதல் ஜுலை மாதம் வரை வருகைதந்த அவர்களின் உறவினர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்த சம்பவம் இலங்கை முழுவதிலும் உள்ள மக்களிடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையிலேயே கந்தகாடு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக இராணுவ ஊடாக பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 2,810 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2317 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 482 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றினால் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை