ஒருசாராரைப் பலவீனப்படுத்தி, காரியத்தைச் சாதிப்பதற்கு அரசாங்கம் முயல்கிறது – இரா.சாணக்கியன்…

ஒருசாராரைப் பலவீனப்படுத்தி, காரியத்தைச் சாதிப்பதற்கு அரசாங்கம்
முயல்கிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்
இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர்
இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மட்டக்களப்பு
மாவட்டத்தில், சிங்களப் பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டும் முயற்சியை,
அரசாங்கம் மிகத் தீவிரமாக முன்னெடுத்துள்ளது.

ஒருசாராரைப் பலவீனப்படுத்தி, காரியத்தைச் சாதிப்பதற்கு அரசாங்கம்
முயல்கிறது. அதனோர் அங்கமாகவே, தொல்பொருள்களில் கைகள் வைக்கப்படுகின்றன.

மேலும், இனவழிப்பை மேற்கொண்ட அரசாங்கம், உரிமைகளைப் பகிரங்கமாக அபகரிக்கும்
மிகச்சூட்சுமமான முயற்சிகளில் ஈடுபட்டு, தமிழரின் கண்களுக்குள் விரலைவிட்டு
ஆட்டிக்கொண்டிருக்கின்றது. அதற்கு, தமிழர் ஒருபோதும் அடிபணியக்கூடாது.

தமிழர் பிரதேசங்களில், சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கியது போல, கிழக்கு
மாகாண தொல்பொருள் ஆராய்ச்சிச் செயலணி ஊடாக, சிங்களவர்களின் எண்ணிக்கையை
அதிகரிக்கலாம் என்ற நோக்கம், அரசாங்கத்துக்கு இருக்கின்றது என்பதை அனைவரும்
விளங்கிக்கொள்ள வேண்டும்.

அவற்றையெல்லாம் எதிர்த்து, எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்க
வேண்டுமாயின், தமிழர் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும்.

அரசாங்கத்தில் இருந்துகொண்டுதான், எமது மக்களுக்கான தேவையைப் பூர்த்திசெய்ய
முடியும் என்றில்லை. எதிர்க்கட்சியில் இருந்தாலும் செய்யமுடியும்.

அதற்கான தகுதியும் திட்டமிடலும் என்னிடம் உள்ளது. உரிமையுடன் கூடிய
அபிவிருத்தியே என்றும் நிலையானது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.