கூட்டமைப்பை தோற்கடித்து புலிகளின் அரசியல் பலத்தை அடியோடு வேரறுத்துவிட்டோம் என்பதை கூற ராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடித்து விடுதலைப் புலிகளின் அரசியல் பலத்தையும் அடியோடு வேரறுத்துவிட்டோம் என்பதைக்கூற ராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர் என கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகளால் காலத்தின் தேவை கருதி உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியானது, தனியே அந்தக் கட்சியின் வெற்றி மட்டுமல்ல எனவும் அது தமிழ் மக்களினதும், தாயக தேசத்தினதும் வெற்றியாகவே கணிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் கூறுகையில், “தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டது. 2001ஆம் ஆண்டு அப்போதைய அரசியல் சூழலில் தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை உணர்ந்து இந்த உருவாக்கம் மேற்கொள்ளப்பட்டது.

கூட்டமைப்பின் உருவாக்கம் தொடர்பாக இன்று பலர் பலதையும் கூறலாம். ஆனால், தாயக தேசத்து மக்களுக்கு கூட்டமைப்பை உருவாக்கியது யார் என்ற உண்மை தெரியாததல்ல.

2004ஆம் ஆண்டு கூட்டமைப்புக்கான ஆதரவை தமிழீழ விடுதலைப் புலிகள் வழங்கியிருந்தார்கள். விடுதலைப் புலிகளை ஏக பிரதிநிதிகளாக கூட்டமைப்பு தனது தேர்தல் அறிக்கையிலும் ஏற்றுக்கொண்டிருந்தது. சிங்களவர்களும் ஆட்சியிலிருக்கும் ராஜபக்ஷக்களும் விடுதலைப் புலிகளை ஆயுத ரீதியாகத் தோற்கடித்ததை பெரும் வெற்றியாகக் கொண்டாடுகின்றார்கள்.

அவர்களுக்கு இப்போது இருக்கின்ற ஒரேயொரு தேவை, தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைகளை அரசியல் ரீதியாக செயற்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான். தமிழ் தேசியக் கூட்டமைப்பை தோற்கடிப்பதன் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத, அரசியல் பலத்தை அடியோடு வேரறுத்து விட்டோம் என்று மார்தட்ட முடியும். அதற்காகவே கூட்டமைப்பை தோற்கடிப்பதற்கு ராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்.

ராஜபக்ஷவினரின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், அவர்கள் விரும்பும் வகையில் கூட்டமைப்பைத் தோற்கடிக்க இங்கே பல கோடரிக் காம்புகளும் களமிறங்கியிருக்கின்றன.

மக்களே! பாலும், கள்ளும் நிறத்தால் ஒன்று. ஆனால், அதன் தரமும் சுவையும் வெவ்வேறானவை. தமிழ் கூட்டமைப்புபோல் வேடமிட்டு களமிறங்கியுள்ள புல்லுருவிகள் தொடர்பாகவும் விழிப்பு அவசியம். இல்லையேல், தமிழ் மக்களின் எதிர்காலம் இருண்ட யுகத்துக்குள்தான் தள்ளப்படும்.

ராஜபக்ஷவினரின் விருப்பத்தை தமிழ் மக்கள் நிறைவேற்றப் போகின்றனரா, இல்லையேல் ராஜபக்சவினரைத் தோற்கடிக்கப் போகின்றனரா?” என சரவணபவன் கேள்வியெழுப்பியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.