இன்னும் மூன்று தினங்களில் நிலைத்தலுக்கான சமன்பாடுகள்…

நிலைத்தலுக்கான அத்தியாயங்கள் எழுதப்படும் தேர்தலாக அமையவுள்ள இப் பொதுத்தேர்தல் பலருக்கு பழக்கப்பட்டது, சிலருக்கு சிக்கலானது. களத்தில் குதித்துள்ள ஒவ்வொரு கட்சிகளும் ஏதோவொரு வகையில், உள்வீட்டு நெருக்கடிகளில்தான் முகத்தையும் காட்டுகின்றன.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி என்பவையே இன்று இந்நெருக்கடிகளால் நொந்துபோயுள்ளன. ஏனைய கட்சிகளால் உள்வீட்டு நெருக்கடிகளை ஓரளவு எதிர்கொள்ள முடிகின்ற போதும், இம் மூன்று கட்சிகளுமே இந்நிலைமைகளால் பெரிதளவில் மனமுடைந்துள்ளன. அறுபது அல்லது எழுபது வருடங்கள் நிலைத்து, மக்கள் முன் நெஞ்சு நிமிர்த்திய இவை, இன்னும் நிலைக்குமா அல்லது இத்தேர்தலுடன் நின்றுவிடுமா? இம்முறை இக்கட்சிகள் பெறவுள்ள ஆசனங்கள்தான் இக்கட்சிகளுக்கான அடையாளமும், கௌரவமும்.

சில கட்சிகளைப் பொறுத்தவரை, கௌரவம் படத்தில் வரும் “நீயும் நானுமா, கண்ணா நீயும் நானுமா” பாடல் பொருந்தியே செல்கிறது. ‘வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதை, அன்னமிட்ட வீட்டில் கன்னமிட்ட கதைகளும்” சில கட்சிகளுக்குப் பொருத்தமானவைதான். நான்கு மாவட்டங்களில் போட்டியிடும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குத்தான் இத்தேர்தல் மிகப் பெரிய கௌரவப் பிரச்சினை. கடந்த 2015 ஆம் ஆண்டு மஹிந்தவுக்கு ஏற்பட்ட தோல்வியிலிருந்துதான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவிதியும் மாறிப் பயணிக்கத் தொடங்கியது. தலைமைப் பதவி பலாத்காரமாகப் பறிக்கப்பட்டதை அடுத்து, ராஜபக்ஷக்கள் அரசியலில் அநாதையாக்கப்படுவர் என்ற எதிர்பார்ப்புக்கள்தான் அதிகமிருந்தன. ஆனால், தோல்வியை அடித்தளமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, இன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை “கழுதை தேய்ந்து கட்டெறும்பாக்கிய கதையாக்கிற்று.”

மேலும், நல்லாட்சி அரசில் ஜனாதிபதியாக இருந்தவர், பொது வேட்பாளர் என்ற பார்வைகளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைக்கு மகுடம் சூட்டும் பார்வைகள்தான். இப்பார்வைகளால் ஏற்பட்ட இழுபறிகள்தான், நல்லாட்சி அரசாங்கத்திற்கு இறுதி சத்திரசிகிச்சையையும் செய்து, ஆயுளை முடிக்க வைத்தது. தற்போது நான்கு மாவட்டங்களில் போட்டியிடும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பெறவுள்ள ஆசனங்களில்தான், இதன் மீதி ஆயுளும் தீர்மானிக்கப்படலாம். உண்மையில் ஆயுள் குன்றிய கட்சியாக இருப்பதையே ஆட்சியாளர்களும் விரும்புவர். மேலும், இக்கட்சியின் தேகாரோக்கியம் இலங்கையின் மூன்றாம் சக்திக்கு வித்திடுவது, சிறுபான்மை அரசியலின் பேரம்பேசும் பலத்தை அதிகரிக்கும். இதை சகலரும் அறிந்திருப்பர். இதனால்தான், தென்னிலங்கைவாதிகள், குறுகிய ஆயுளுள்ள கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இருப்பதை விரும்புபவர்களாக உள்ளனர். இது, இந்த சிந்தனைவாதிகளுக்கு ஒரு கல்லில் இரு மாங்காய்களை பறிப்பதாக இருக்கின்றது.

மறுபுறத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்காலமோ “தனது ஒரு கண் குருடானாலும் பரவாயில்லை, ஐக்கிய மக்கள் சக்தியின் இரு கண்களும் குருடாகுவதையே விரும்புகிறது.” நிறைவேற்று அதிகாரத்தை அறிமுகப்படுத்தி, அரசியலின் உச்ச பயனை அனுபவித்த கட்சியிது. 1994 இல் பறிபோன ஜனாதிபதிப் பதவியைக் கைப்பற்ற இன்றுவரை முயற்சித்தும் முடியாமலுள்ளமை கவலைதான். இக்கட்சிக்கு அடையாளம் தந்த மிகப்பெரிய ஆளுமையான அமரர் ரணசிங்க பிரேமதாசவின் மகனும் இக்கட்சியில் இல்லை. இவருக்குப் பின்னால் அவரது தந்தையின் ஆளுமை உள்ளதாகக் கருதித்தான் ஐக்கிய மக்கள் சக்தி பயணித்துக் கொண்டிருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலில், சஜித் பிரேமதாச தோல்வியடைய, அவரது தந்தை முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுக்கு கட்சிக்குள் அன்றிருந்த எதிர்ப்புச் சக்திகளின் வாரிசுகளும், வழித்தோன்றல்களும்தான் காரணமெனக் கருதியே, ஐக்கிய மக்கள் சக்தி அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, ரணில், சஜித் அணி கைப்பற்றவுள்ள ஆசனங்கள்தான், இவர்களின் தலைமைத்துவ அடையாளங்களுக்கு அத்தாட்சியாகவுள்ளது. இவ்வாறு செல்லும் எதிர்காலம், இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலையிலும் ஒரு அச்சடித்துள்ளது. இனத்துக்காக, உரிமைக்காக உழைத்த, குரல்கொடுத்த தமிழர் அரசியல் பிளவடைந்து செல்வது வேதனை என்பதை விடவும், பெரும் வினாக்களையும் எழுப்பியுள்ளது. சம்பந்தனின் தலைமையிலா அல்லது விக்னேஸ்வரனின் வழிகாட்டல்களிலா? இனி அடுத்த பயணம் என்ற வெளிப்பாடுகளே, இவர்கள் பெறும் ஆசனங்களில் வெளியாகவுள்ளன.

சிங்களப் பெருந்தேசியத்தின் விழிப்புக்கு மத்தியில், பனிப்பாறையில் பயணிப்பது போன்றுதான் காய்களை நகர்த்த நேரிட்டுள்ள நிலையில், கடும்போக்கை கையிலெடுப்பது இன்னும் பல தசாப்தங்கள் எம்மைத் தாமதிக்க வைக்கலாம். வரண்டு போன தொண்டைக் குழிக்கு அவசரமாக ஆகாரம் தேவைப்படுகையில், இன்னும் எதற்கு காத்திருப்பு என்றுதான் தமிழ்ச் சமூகம் நினைக்கிறது. எனவே, வீராப்பு வார்த்தைகள், வீரவசனங்களை விடுத்து, விவேக வழியில் தீர்வைப் பெற முயற்சிப்பதில்தான், தமிழர் தரப்பின் அரசியல் தீர்வும் சாத்தியமாகவுள்ளது.

மேலும், எழுதப்படாத தலைவிதியாக “ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு” என்கின்ற ஒரு அரசியல் அணி மட்டக்களப்பில் போட்டியிடுகிறது. முஸ்லிம் பிரபல்ய அரசியல்வாதிகள் பலர் இந்த அணியில் இருந்தாலும், பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்காகக் களமிறங்கிய மாவட்டம்தான் பெரும் தலைச்சொறிவை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களின் தனிப்பெரும்பான்மை மாவட்டமான மட்டக்களப்பில் பல்முனைச் சவால்கள் இம்முறை நிலவுகின்றன. இதற்குள்ளா இவர்களும்? இவ்வாறாகவும் சிலர் சிந்திக்கின்றனர்.

எனவே, ஒட்டு மொத்தத்தில் நிலைத்தலுக்கான சமன்பாடுகளாகப் பார்க்கப்படவுள்ள இத்தேர்தலில், இக்கட்சிகள் பெறவுள்ள ஆசனங்கள்தான் மக்களின் அங்கீகாரத்தை அடையாளப்படுத்தவுள்ளன. ஆனால், அமையவுள்ள அரசாங்கத்தில் அங்கீகாரம் மாத்திரம் பேரம்பேசலைப் பலப்படுத்தாத சூழலையே ஏற்படுத்தப்போகிறது. சமயோசிதம், விவேகம், சூழ்நிலைகளைக் கையாளும் தீட்சண்யம் என்பவற்றோடுதான், பாராளுமன்றப் பலத்தை பிரயோகிக்க நேரிட்டுள்ளது. சிறுபான்மைக் கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகளும், பெரும்பான்மைப் பாரம்பரிய கட்சிகள் பிளவுக்குள் சிக்கினாலும் பிரிய மனமில்லாது தடுமாறுவதும் இலங்கை அரசியலில் எதை ஏற்படுத்தும்?

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.