என்னுடைய அலுவலகம் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டதன் மூலம் நீதிக்கான கேள்வி எழுப்பப்பட்டுள்ளது

 என்னுடைய அலுவலகம் உள்ளிட்ட பிரதேசம் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டதன் மூலம் நீதிக்கான கேள்வி எழுப்பப்பட்டுள்ளது என அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

அத்தோடு தனக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கும் வாக்களித்த அம்பாரை மாவட்ட மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

அக்கரைப்பற்றில் உள்ள அவரது இல்லத்தில் இன்று(08) இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் நீதி நிலைநாட்டப்படவேண்டும். நியாயம் நிலைநாட்டப்படவேண்டும். அம்பாரையில் வாழும் மக்கள் நிம்மதியாக வாழவேண்டும் எனும் அடிப்படையிலேதான் நாம் தேர்தல் களத்தில் குதித்தோம். ஆனாலும் இன்று நீதிக்கும் நியாயத்திற்குமான கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இன்று எனது அலுவலகம் உள்ளிட்ட பிரதேசம் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டதுடன் எனது அலுவலகம் தேடுதல் நடத்தப்பட்டதன் மூலம் அது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்தோடு இதுபோன்ற சம்பவங்கள் தொடருமோ எனும் அச்சம் மக்கள் மத்தியிலே உருவாகியுள்ளதுடன் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இப்பகுதிலே தொடருமோ எனும் அச்ச உணர்வும் மக்களிடம் உருவாகியுள்ளது. அந்த வகையிலே இச்செயற்பாடுகள் உடன் நிறுத்தப்பட வேண்டும் என்றார். அத்தோடு தேர்தலில் களமிறக்கப்பட்ட கருணாவினால் எந்தவிதத்திலும் அம்பாரை மாவட்ட மக்கள் அச்சுறுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த காலத்தில் அவரது குழுக்களினால் மக்கள் அச்சுறுத்தப்பட்டனர். இவ்வாறு அச்சுறுத்தல் விடுப்பதன் மூலம் மக்கள் பலவீனப்படுத்தப்படுகின்றனர். அந்ந நிலை மாற்றப்படுவதுடன் அரசு மக்களின் உர்pமையினை பாதுகாக்க நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும்   என்றார்.

இதேநேரம் அம்பாரை மாவட்டத்தின் தமிழர் பிரதிநிதித்துவம் திட்டமிட்டு இழக்க வைக்கப்பட்டுள்ளது. தேர்தலிலே தமிழரின் இருப்பை கேள்விக்குறியாக்குவதற்காக களமிறக்கப்பட்டவர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக மேற்கொண்டுள்ளனர். இதன் மூலம் அதாவுல்லா ஹரிஸ் மற்றும் றிசாட் ஆகியோரின் கட்சிகளுக்கு உறுப்பினரை பெற்றுக்கொடுத்துள்ளார். இதனால் தமிழர்கள் அரசியல் அநாதையாக்கப்பட்டுள்ளனர். ஆகவே இனிவரும் காலங்களிலாவது மக்கள் விழிப்பாக செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அத்தோடு அம்பாரை மாவட்ட மக்களின் எதிர்கால உரிமை அபிவிருத்தி சார்ந்த விடயங்கள் சிறப்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பால் முன்னெடுக்கப்படும் . அதற்கு என்றும் நான் உறுதுணையாக இருப்பேன் எனவும் மக்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்