தமிழ்க் கூட்டமைப்பினர் ஏகப்பிரதிநிதிகள் அல்லர் – ‘மொட்டு’வின் நிறுவுநர் பஸில் திட்டவட்டம்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்லர். எனவே, தேர்தல் விஞ்ஞாபனத்தில் அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் பேச்சு நடத்துவதற்கு நாம் தயாரில்லை. எந்தவொரு நிபந்தனைகளையும் ஏற்கவும் மாட்டோம்.”

– இவ்வாறு திட்டவட்டமாக இடித்துரைத்துள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நிறுவுநரான பஸில் ராஜபக்ச.

சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நிபந்தனை அடிப்படையில் எம்முடன் எவரும் அரசியல் நடத்த முடியாது. கூட்டமைப்பின் நிபந்தனைகளையும் ஏற்கமாட்டோம்.

எமது ஆட்சியில்தான் யாழ்ப்பாணத்துக்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. யாழ். தேவியை ராஜபக்ச அரசே தலைமன்னார் வரை கொண்டு சென்றது. ஆனாலும், ஐக்கிய தேசியக் கட்சியையே கூட்டமைப்பு ஆதரித்தது. ஐ.தே.க. ஆட்சியைப் பாதுகாத்தது. வரவு – செலவுத் திட்டங்களுக்கு ஆதரவு வழங்கியது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழ் மக்களின் ஏக ப்பிரதிநிதிகள் அல்லர். கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள சமஷ்டி உட்பட உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்க முடியாது. அவர்களுடன் பேச்சு நடத்த வேண்டிய தேவையும் எழவில்லை.

வடக்குக்கு மாகாண சபையை வழங்கினோம். அதனூடாகப் பயன்பெறவில்லை. முதல் தடவையாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில்கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடவில்லை. அடுத்த முறை நாம் நிச்சயம் கிழக்கு மாகாண சபையைக் கைப்பற்றுவோம்.

கூட்டமைப்பு ஊடாக அல்லது வடக்கு, கிழக்கில் எம்மால் தனித்து இயங்கி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும்” – என்றார்.
………..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.