வெள்ளை வானில் கடத்தப்பட்ட யுவதி மீட்பு

யாழ்.நீர்வேலி வடக்கு பகுதியில் வானில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட யுவதி கோப்பாய் பொலிஸாரால் இன்று மல்லாகத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.

நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு வெள்ளை வானில் சென்ற நான்கு பேர் கொண்ட குழுவினர். வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்களை தாக்கி 20 வயது மதிக்கதக்க யுவதியை கடத்திச் சென்றதாக அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.

இதனை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார் மல்லாகம் பகுதியில் வைத்து இன்று யுவதியையும், கூட்டிச்சென்ற பிரதான சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி குறித்த இளைஞனை நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும், யுவதி வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இளைஞன் யுவதியை கூட்டிக் கொண்டு சென்றுள்ளதாகவும் குறித்த யுவதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் தாம் வெள்ளை வானில் செல்லவில்லை என்றும் மோட்டார் சைக்கிளில் சென்றே யுவதியை அழைத்துச் சென்றதாகவும் இவரின் பெற்றோர் வேண்டுமென்றே என் மீது குற்றம் சுமத்தி உள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் குறித்த இளைஞன் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யுவதியும், இளைஞனும் நாளை யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்