19 மட்டுமல்ல 13 இற்கும் உடன் முடிவு கட்டுங்கள்! – கோட்டாவிடம் குணதாஸ வலியுறுத்து

“இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள அரசமைப்பின் 13 மற்றும் 16 ஆவது திருத்தச் சட்டங்களை இல்லாதொழிப்பதற்காக புதிய அரசமைப்பு ஒன்றை அரசு விரைவாக முன்வைக்க வேண்டும்.”

– இவ்வாறு தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை மாத்திரம் நீக்குவதை இலக்காகக் கொண்டு அரசு செயற்படக்கூடாது.

13, 16, 18 ஆகிய சரத்துகளையும் இல்லாதொழிப்பதற்காகப் புதியதொரு அரசமைப்பு தேவையாகவுள்ளது. புதியதொரு அரசமைப்பை இயற்றுவதற்கு மக்களும் ஆணை வழங்கியுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நேரில் சந்தித்து எமது மேற்படி யோசனையை முன்வைப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.

நாடாளுமன்றத்துக்குத் தெரிவானவர்கள் சபாபீடத்தில் சபாநாயகர் முன்னிலையில் உறுதியேற்பதே சிறப்பு. அதைவிடுத்து முள்ளிவாய்க்கால் போன்ற இடங்களில் பதவிப்பிரமாணம் செய்வது தவறான முன்னுதாரணமாகும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.