கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம் கலையரசனுக்குக் கொடுத்தது தவறல்ல!

கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம் கலையரசனுக்குக் கொடுத்தது தவறல்ல!

– வழங்கிய முறைமைதான் தவறு என்கிறார் மாவை

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம் அம்பாறையைச் சேர்ந்த தவராசா கலையரசனுக்கு வழங்கியது தவறல்ல. ஆனால், அது வழங்கிய முறைமைதான் தவறு.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் திருகோணமலையில் இன்று நடைபெற்றது. கட்சியின்  அரசியல் குழுவின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் அவரின் இல்லத்தில் இன்று நண்பகல் சுமார் இரண்டு மணி நேரம் இந்தக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் ஆரம்பத்தில்  மாவை சேனாதிராஜா உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

இன்றைய கூட்டத்தில் அரசியல் குழு உறுப்பினர்கள் எல்லோரும் பங்குபற்றினர். எதிர்பார்த்த குழப்பம் ஏதும் கூட்டத்தில் இடம்பெறவில்லை. கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா ஆரம்பத்தில் தேசியப் பட்டியல் எம்.பி. நியமனம் குறித்து உரையாற்றினார்.

அந்த நியமனம் அம்பாறையின் கலையரசனுக்கு வழங்கியது தவறல்ல என்று கூறிய அவர், ஆனால் அது வழங்கிய முறைமை தவறு என்று குறை கூறினார். அவரது குற்றச்சாட்டு தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் மீது காட்டமாக இருந்தது. ஆனால், பொதுச்செயலாளர் துரைராஜசிங்கம் அதற்குப் பதிலளித்து, மோதலில் ஈடுபடாமல் தவிர்த்துக் கொண்டார்.

“அம்பாறைக்கு அல்லது மகளிர் பிரதிநிதி ஒருவருக்கு அது கிட்டுவதுதான் பொருத்தம் என்று நான் கருதினேன். எனினும், ஆதரவாளர்களும் கட்சிப் பிரமுகர்களும், அதனைச் பெற்றுக்கொள்ளும்படி என்னை வற்புறுத்தியமையால் நான் அதற்கு இணங்கினேன். இப்போது அந்தப் பதவி அம்பாறையின் கலையரசனுக்கு வழங்கப்பட்டு விட்டது. இனிமேல் அதைக் குழப்ப வேண்டாம். இந்த விடயத்தை இன்று இங்கு பேசுவதை நிறுத்துவோம். 29ஆம் திகதி வவுனியாவில் நடைபெறும் கட்யின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இதனை ஆராய்வோம்” என்று தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். அதனை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

“நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியின் பின்னடைவு குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்குக் குழு ஒன்றை அமைப்போம்” என்று மாவை சேனாதிராஜா இதன்போது தெரிவித்தார்.

அந்தக் குழுவுக்குக் கட்சி சாராத பொதுப் பிரமுகர்களை நியமிப்பதே பொருத்தமானது என சுமந்திரன் தெரிவித்த யோசனையை எல்லோரும் ஏற்றுக்கொண்டனர்.

இதையடுத்து கடந்த பொதுத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஏற்பட்ட பின்னடைவுகளை விரிவாக – நடுநிலையாக – பக்கம் சாராமல் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு கட்சி சார்பற்ற ஐந்து பிரமுகர்களைக் கொண்ட குழு ஒன்றை நியமிப்பது என்றும், அந்தக் குழுவின் அறிக்கையைப் பரிசீலித்து அதனடிப்படையில் அடுத்த கட்டம் குறித்துத் தீர்மானிப்பது என்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.