1600 பில்லியன் ரூபாவுக்கான இடைக்கால கணக்கறிக்கையை சபையில் முன்வைப்பார் மஹிந்த

1600 பில்லியன் ரூபாவுக்கான இடைக்கால கணக்கறிக்கையை சபையில் முன்வைப்பார் மஹிந்த – ‘சண்டே டைம்ஸ்’ தகவல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தை நவம்பரில் முன்வைக்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக ஆயிரத்து 600 பில்லியன் ரூபாவுக்கான இடைக்கால கணக்கறிக்கை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்சவால் முன்வைக்கப்படவுள்ள இந்த இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவையின் அங்கீகாரமும் பெறப்படவுள்ளது என ‘சண்டே டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

இடைக்கால கணக்கறிக்கைக்கு சபை அங்கீகாரம் வழங்கிய பின்னர் கடந்த ஒரு வருட காலமாக தாமதிக்கப்பட்டு வந்த 200 பில்லியன் ரூபா நிர்மாணங்களுக்கான கொடுப்பனவுகளுக்கு செலுத்தப்படும் என்றும், 15 பில்லியன் ரூபா பாடசாலை நிர்மாண நிலுவைக் கொடுப்பனவுகளுக்காக செலுத்தப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இடைக்கால கணக்கறிக்கையின் மூலம் முழு கொடுப்பனவுகளையும் செலுத்த முடியாது என்ற போதிலும் மக்கள் மத்தியிலான பணப்புழக்கத்துக்கு இது உதவும் என்று சமுர்த்தி மற்றும் நுண்நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த பெப்ரவரியில் கோட்டாபய அரசு இடைக்கால கணக்கறிக்கையைச் சமர்ப்பித்த போதும் அதற்கு எதிர்க்கட்சி ஆதரவளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
…………..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.