இலஞ்சம் வாங்கிய, வழங்கிய 2 சம்பவங்களில் இருவர் கைது
இலஞ்சம் வாங்கியமை மற்றும் கொடுத்தமை தொடர்பில் இரு வேறு சம்பவங்களில் இருவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தொம்பே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு 2 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக வழங்க முற்பட்ட ஒருவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கஞ்சா வைத்திருந்த மற்றும் விற்பனை செய்த குற்றச்சாட்டில் தொம்பே பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரை, விடுதலை செய்யுமாறு கோரியும், போதைப்பொருள் விற்பனை செய்தமைக்கு எதிராக வழக்குத் தொடராது இருக்குமாறு கோரியும் 2 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக வழங்க முற்பட்டவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட களனி, பெதியாகொடை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சந்தேகநபரின் சகோதரரே இக்குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை ஆணைக்குழுவுக்கு தொம்பே பொலிஸாரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் விரிவான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சந்தேகநபரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சகர் பத்மினி வீரசூரிய தெரிவித்தார்.
21 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற துறைமுக முன்னாள் தொழிலாளர் கைது
இதேவேளை, ரூபா 21 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில், துறைமுக அதிகார சபையில் பணிபுரிந்த தொழிலாளர் ஒருவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மெணிக்ஹின்ன, வலல பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரால், ஜனாதிபதியின் மக்கள் முறைப்பாட்டுப் பிரிவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பத்மினி வீரசூரிய தெரிவித்தார்.
கண்டி, யட்டிநுவரவைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முறைப்பாட்டாளரான குறித்த பெண்ணுக்கு இடமாற்றம் பெற்றுத் தருவதற்கும் திகண பிரதேசத்திலுள்ள அரச காணியொன்றின் பகுதியைப் பெற்றுத் தருவதற்காக உரிய அமைச்சின் மூலம் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்து 26 ஆயிரம் ரூபா பணத்தைக் கோரியுள்ள நிலையில், அதில் 21 ஆயிரம் ரூபா பணத்தைப் பெறும்போது இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பத்மினி வீரசூரிய தெரிவித்தார்.
சந்தேகநபரைக் கண்டி நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை