நுனி நாக்கில் தேன் அடி நாக்கில் நஞ்சு வைத்துப் பேசும்  பிரதமர் மகிந்த

நக்கீரன்

நுனி நாக்கில் தேன் அடி நாக்கில் நஞ்சு வைத்துப் பேசுபவர்கள் இருக்கிறார்கள். இந்தக் கலையில் முனைவர் பட்டம் பெற்றவர் மகிந்த இராசபக்ச. அமைச்சரவையில் சிறுபான்மையினருக்கு போதிய பிரதிநித்துவம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் ஊடகவியலாளர்களால் முன்வைக்கப்பட்ட போது அவர் பின்வருமாறு பதில்  அளித்திருக்கிறார்.

“சிறுபான்மை இனம், பெரும்பான்மை இனம் என்ற வேறுபாடு இராஜபக்சக்களின் ஆட்சியில் இல்லை. அனைத்து இன மக்களும் இலங்கை மாதாவின் பிள்ளைகள். இன ரீதியில் எவருக்கும் நாம் அமைச்சுகளை வழங்கவில்லை.

தகுதி நிலையில் உள்ளவர்களுக்கே அமைச்சுப் பதவிகளை சனாதிபதி வழங்கியுள்ளார்.

அதேவேளை, ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்களையும் நியமித்துள்ளோம். வடக்கிலுள்ள சகல மாவட்டங்களுக்கும் அபிவிருத்திக் குழுத்தலைவர்களாக தமிழ்ப் பிரதிநிதிகளையே நியமித்துள்ளோம். அவர்களில் ஒருவர்முஸ்லிம் பிரதிநிதி. அதேவேளை, கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்துக்கும் அபிவிருத்திக் குழுத் தலைவராக தமிழ்ப் பிரதிநிதி ஒருவரையே நியமிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

அமைச்சுகளின் எண்ணிக்கை வரையறைக்கேற்ப மேலும் தகுதியானவர்களை இணைத்துக்கொள்வோம்.

புதிய அமைச்சரவையில் தமிழர் ஒரு வரும் முஸ்லிம் ஒருவரும் என இரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். இராசாங்க அமைச்சுகளிலும் தமிழர்கள் இருவர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர், முஸ்லிம்களில் எவருமே நியமிக்கப்பட வில்லை எனவும் எதிரணியினர் இனவாதத்தைத் தூண்டும் வகையில் தமிழ், ஆங்கில,சிங்கள ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

சிறுபான்மை இனத்தவர்களில் நால்வருக்கு மட்டுமே புதிய அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது என்பதே எதிரணியினரின் இனவாதப் பரப்புரையின் தலைப்பாக உள்ளது. சிறுபான்மை இன மக்களை இந்த அரசு புறக்கணித்துள்ளது என்ற விசமத்தனமான சிந்தனையை தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் எதிரணியினர் விதைக்க முற்படுகின்றனர்.

நாட்டிலுள்ள அனைத்து இன மக்களையும் ஒரே கண்ணோட்டத்திலேயே நாம் பார்க்கின்றோம். எந்த இனத்தையும் இனவாத நோக்குடன் நாம் பார்க்கவில்லை.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசே தமிழ் மக்களுக்குத் தீர்வு வழங்கியது என்ற வரலாற்றுப் பதிவை இந்த ஆட்சியில் நாம் ஏற்படுத்துவோம்.”

தகுதியானவர்களுக்கே அமைச்சர், இராசாங்க அமைச்சர் பதவிகளை வழங்கியுள்ளோம். அப்படியிருக்க “எதிரணியினர் இனவாதத்தைத் தூண்டும் வகையில் தமிழ், ஆங்கில,சிங்கள ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்”  எனச் சொல்வதின் மூலம் தன்னைத் தேசியவாதியாக சித்திரிக்கிப் பார்க்கிறார். ஆனால் சாத்தான் வேதம் ஓதுகிறது ஆகவே நாம் பார்க்கிறோம்!

இப்படி இனிக்கப் பேசித்  தமிழர்களது கழுத்தை நோகாமல் வெட்டுவது இது முதல் தடவை அல்ல. முன்னரும் பல சிங்களத் தலைவர்கள் இப்படிப் பேசியிருக்கிறார்கள்.

சுயாதீன இலங்கையின் சோல்பரி அரசியலமைப்பிற்கு வாக்களிக்குமாறு தமிழ் உறுப்பினர்களை வலியுறுத்தி 1945 ஒக்தோபரில் சட்ட சபையில் உரையாற்றிய டி.எஸ். சேனநாயக்கவின் பின்வருமாறு பேசியிருந்தார்,

“நீங்கள் இலண்டனில் இருந்து ஆளப்பட விரும்புகிறீர்களா அல்லது இலங்கையை இலங்கையர் ஆள விரும்புகிறீர்களா? இலங்கை தேசிய காங்கிரஸ் சார்பாகவும்  மற்றும் எனது சார்பாகவும், சிறுபான்மை சமூகங்களுக்கு ஒரு சுதந்திரன் லங்காவில் எங்களால் (சிங்களவர்களால்) உங்களுக்கு எந்தத்  தீங்கும்  நேராது  என நான் உறுதியளிக்கிறேன். ”

DS Senanayake who addressing the State Council in October 1945 urging Tamil members to vote for the Soulbury constitution of independent Ceylon  said:

“Do you want to be governed from London or do you want, as Ceylon, to help govern Ceylon? On behalf of the (Ceylon National) Congress (founded by Sir Ponnambalam Arunachalam in 1919) and on my behalf, I give the minority communities the sincere assurance that no harm need you fear at our hands in a free Lanka.”

சேனநாயக்க குறிப்பிடும் இலங்கைத் தேசிய காங்கிரஸ் சேர் பொன்னம்பலம் அருணாசலம் அவர்களால் உருவாக்கப்பட்டது. நாம் சிங்களவர்களோ தமிழர்களோ அல்ல. நாம் இலங்கையர் என்ற கோட்பாட்டை இலங்கைத் தேசிய காங்கிரஸ் தனது கோட்பாடாக வைத்திருந்து.

இப்படித் தேனொழுகப்   பேசிய பெரிய சேனநாயக்கா இலங்கை சுதந்திரம் பெற்ற (1948) அதே ஆண்டில் 800,000 மலையகத் தமிழர்களின் குடியுரிமையைப் பறிக்கும் சட்டத்தை  1948 ஆம் ஆண்டு நொவெம்பர்  மாதம் 15 ஆம் தேதி  நிறைவேற்றப்பட்டது. அடுத்த ஆண்டு  நாடாளுமன்ற தேர்தல் (திருத்த) சட்டத்தின் மூலம் (Parliamentary Elections (Amendment) Act of 1949)  அவர்களது வாக்குரிமை  பறிக்கப்பட்டது.

இது எப்படியென்றால் கடலுக்குள் வாழும் பெரிய மீன் சின்ன மீனைப் பார்த்துச் சொல்லுமாம் “நண்பா!  பரந்து விரிந்து கிடக்கும் இந்தக் கடல் எனக்கும் உனக்கும் பொதுவானது. உனக்கு இடையூறு ஒன்றும் ஏற்படாது. அப்படி வந்தால் அதை நான் பார்த்துக் கொள்வேன்.” கொஞ்ச நேரத்தில் பெரிய மீனுக்கு பசியெடுக்கம். உடனே அது சின்ன மீனைப் பிடித்து விழுங்கி விழும். இந்தப் பெரிய மீனைப் போலவே பெரும்பான்மை சிங்கள – பவுத்தர்கள் நடந்து கொள்கிறார்கள். நாடு பெற்ற சுதந்திரம் தங்களுக்கே உரியது என்கிறார்கள். அதற்கு தாளம் போட எங்களுக்குள்ளும் ஆட்கள் இருக்கிறார்கள்.

19  ஆவது சட்ட திருத்தத்தைத் முற்றாக நீக்கவும் புதிய அரசியல் யாப்பொன்றைத் தயாரிக்கவும் அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. அரசுக்கு  நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருப்பதால் இவற்றை அரசு நடைமுறைப்படுத்துவது அசாத்தியமாக இருக்கப் போவதில்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்