சித்தாண்டியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஞாபகார்த்த தினம் அனுஷ்டிப்பு

1990ம் ஆண்டு சித்தாண்டி பிரதேசத்தில் இலங்கை இராணுவத்தின் சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் 30வது ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வு இன்றைய தினம் சித்தாண்டி முருகன் ஆலயத்திற்கு முன்பாக பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம், ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினர் மு.முரளிதரன், வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவி அமலநாயகி உட்பட பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

1990ம் ஆண்டு இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையால் சித்தாண்டி, கிரான், சந்திவெளி, மாவடிவேம்பு, முறக்கொட்டான்சேனை பிரதேசங்களின் மக்கள் சித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் அமைக்கப்பட்ட நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த போது ஆவணி 15,18,22ம் திகதிகளில் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் கைது செய்யப்பட்டு பின் காணாமல் ஆக்கப்பட்ட சுமார் 100க்கும் மேற்பட்டவர்களின் ஞாபகார்த்தமாக இன்றைய அனுஷ்டிப்பு இடம்பெற்றது.

முருகன் ஆலயத்தில் வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வு மௌன அஞ்சலியுடன், வாயில் கறுப்புத் துணி கட்டி உறவுகள் தங்கள் ஆதங்கத்தினையும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பான எதிர்பார்ப்பினையும் வெளிப்படுத்தும் வண்ணம் அமைதிவழியில் இந்த அனுஷ்டிப்பினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.