தாயுடன் உறங்கிக் கொண்டிருந்தபோது கடத்தப்பட்ட சிறுமி மீட்பு

பாறுக் ஷிஹான்

அம்பாறை, இங்கினியாகல பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் அதிகாலை வீட்டுக்குள் நுழைந்த ஒருவரால் கடத்திச் செல்லப்பட்ட 3 வயது சிறுமி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தன்னுடன் படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்த மகள் காணாமல் போயிருப்பதை அறிந்த தாய், அயலவர்களுடன் இணைந்து மகளை தேடியதுடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அச்சந்தர்ப்பத்தில் இங்கினியாகல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த சிவில் பாதுகாப்பு படையின் அதிகாரியான துஷ்யந்த டி சில்வாவுக்கு அதிகாலை 3.30 மணியளவில் தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட இங்கினியாகல பொலிஸ் பொறுப்பதிகாரி, சிறுமி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கோரியுள்ளார்.

இது தொடர்பில் சிவில் பாதுகாப்பு அதிகாரி விழிப்புடன் இருந்த நிலையில், அவர் நின்றிருந்த இடத்துக்கு அருகிலுள்ள வீதியில் சிறுமியின் அழுகுரல் கேட்டுள்ளதுடன் பின்னர் திடீரென சத்தம் நின்றுள்ளது. மீண்டும் அழுகுரல் கேட்டதையடுத்து, தனது மோட்டார் சைக்கிளை இயக்காமல் அவ்வதிகாரி தள்ளிச் சென்றுள்ளார்.

வீதியில் வைத்து திடீரென மோட்டார் சைக்கிளை இயக்கி, மின்விளக்கை ஒளிரவிட்டபோது, சிறுமியை தூக்கிக்கொண்டு நபர் ஒருவர் நிற்பதைக் கண்டுள்ளார்.

சிறுமி வீதியி;ல் தனியாக நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அவரை தான் கண்டதாகவும் அந்நபர் சிவில் அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். பின்னர் சிறுமியை வீட்டில் கொண்டு சேர்ப்போம் என அதிகாரி கூறியபோது, முதலில் அந்நபர் மறுப்பு தெரிவித்திருந்தார்.

எனினும், பின்னர் சிறுமியை அந்நபரையும் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சிவில் அதிகாரி சிறுமியின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

எனினும், அந்நபர் இடைநடுவில் இறங்கிச் செல்ல முயன்றிருந்த போதிலும், சிவில் அதிகாரியின் கோரிக்கைக்கு அமைய அந்நபர் தொடர்ந்தும் மோட்டார் சைக்கிளில் உடன் பயணித்துள்ளார்.

இந்நிலையில், இங்கினியாகல வைத்தியசாலைக்கு அருகில் வைத்து குழந்தையை இங்கினியாகல பொலிஸார் பொறுப்பேற்றதுடன், மோட்டார் சைக்கிளில் வந்த நபரையும் கைது செய்தனர்.

அதன்போது, சிறுமியை வீதியிலிருந்து கண்டுபிடித்ததாக் கூறிய நபரே சிறுமியை கடத்தியவர் என்றும் அவர் அச்சிறுமியின் உறவினர் என்றும் தெரியவந்ததாக இங்கினியாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.