அபிவிருத்தியின் ஊடாக மக்களை தமது பக்கம் திருப்பி விடலாம் என அரசாங்கம் கருதுகின்றது

வவுனியா நிருபர்

வடக்கு – கிழக்கில் அபிவிருத்தியின் ஊடாக மக்களை தமது பக்கம் திருப்பி விடலாம் என அரசாங்கம் கருதுகின்றது: செல்வம் அடைக்கலநாதன்

வடக்கு – கிழக்கில் அபிவிருத்தியின் ஊடாக மக்களை தமது பக்கம் திருப்பி விடலாம் என அரசாங்கம் கருதுகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பின் பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த இந்த அரசாங்கத்தின் நாடாளுமன்ற ஆரம்ப உரையில் இந்த நாட்டின் சிறுபான்மை இனங்களான தமிழ், முஸ்லிம், மலையக தமிழர் தொடர்பில் எந்தவொரு விடயத்தையும் ஜனாதிபதி தெரிவிக்கவில்லை. இனப்பிரச்சனைக்கான தீர்வு திட்டம் தொடர்பிலும் எதுவும் கூறவில்லை. அபிவிருத்தி என்பது கட்டாயம் செய்யப்பட வேண்டிய ஒரு விடயம். ஜனாதிபதியின் முன்னைய உரையிலும் பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் வந்ததாகவும், அவர்களுக்கு முன்னுரிமையளித்தும் அவரது உரை அமைந்திருந்தது. தற்போதும் புத்த மதத்திற்கு முன்னுரிமையளித்து, அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டதை விட மேலும் முன்னுரிமை படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது.

தற்போதைய அமைச்சரவையில் இந்து கலாசாரம், கிறிஸ்தவ கலாசாரம் ஆகிய அமைச்சுக்கள் இல்லை. கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் இருந்த அரச கரும மொழி அமைச்சும் இல்லாத தன்மை காணப்படுகின்றது. இதைவிட ஒவ்வொரு திணைக்களங்களுக்கும் இராணுவத்தினர் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதைவிட அபாயகரமான விடயம். கச்சேரி உள்ளிட்ட அரச திணைக்களங்கள் ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது மிகவும் அபாயகரமானது. அவை அமைச்சுக்களின் கீழ் இருக்கும். எனவே எதிர் வரும் காலங்களில் அனைத்து திணைக்களங்களிலும் இராணுவத்தினுடைய செயற்பாடுகள் அதிகரிக்கும் என்பதை உணரக் கூடியதாகவுள்ளது.

அத்துடன் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழர் என வாழ்கின்ற நிலையில் ஒரு நாடு ஒரு சட்டம் என்பது எவ்வாறு சாத்தியப்படும் என்பது தெரியவில்லை. முஸ்லிம் சமூகத்திற்கு என தனியான ஒரு சட்டம் இருக்கின்றது. ஒரே சட்டத்தை மதங்களின் மீது பயன்படுத்துவதன் மூலம் அந்த மக்களின் தனித்தன்மை பாதிக்கப்பட்டு மதங்களின் மேல் கைவைக்கும் நிலைமையும் ஏற்படும். எனவே பெரும்பான்மை மக்களை தவிர ஏனைய தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம், மலையக தமிழர் ஆகியோரின் எதிர்காலம் கேள்விக்குறியான விடயமாகவுள்ளது. எந்தவொரு உரிமையையும் வழங்காது அபிவிருத்தியை மட்டும் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளார்கள் என உணர முடிகிறது. எமது மக்கள் அபிவிருத்தியையும் விரும்புகிறார்கள். அதேபோல் இனப்பிரச்சனைக்கான தீர்வையும் விரும்புகிறார்கள். ஆகவே அபிவிருத்தி ஊடாக தமிழ் மக்களது பிரச்சனைகளை தீர்காது விட்டு விடலாம் என்பதில் அரசாங்கம் பகல் கனவு காணக் கூடாது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் பிரச்சாரங்களில் அபிவிருத்தி தெர்டர்பாகவும் தெரிவித்துள்ளோம். அபிவிருத்தி என்பது எந்த வழியில் வந்தாலும் அதனை ஆதரிப்போம். அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அபிவிருத்தி என்ற போர்வையில் இராணுவத்தின் பிரச்சனம், தமிழர்களின் பூர்வீகத்திற்குள் சிங்கள மக்களின் பிரசன்னம் வருகின்ற போது அதனை நாங்கள் தட்டிக் கேட்போம்.

ஆகவே, அரசாங்கத்தினுடைய திட்டம் வடக்கு – கிழக்கு பகுதிகளில் அபிவிருத்தியின் ஊடாக மக்களை தமது பக்கம் திருப்பி விடலாம் என்பதே. வடக்கைப் பொறுத்தவரை எமது மக்கள் சரியான முறையில் வாக்களித்துள்ளார்கள். யாழ்ப்பாணத்தில் அங்கஜன் இராமநாதன் அதிக விருப்பு வாக்குளைப் பெற்றுள்ள போதும், அதிகமான மக்கள் தேசியத்துடன் நிற்கிறார்கள். அங்கஜன் இராமநாதன் மட்டுமே கை சின்னத்தில் வென்றுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு 3 ஆசனங்களைப் பெற்ற போதும் ஏனைய கட்சிகளும் தேசியத்துடன் நிற்பவர்களே வென்றுள்ளார்கள்.

வன்னியைப் பொறுத்தவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூன்று ஆசனங்களைப் பெற்றுள்ளது. அபிவிருத்தியுடன் மக்கள் தேசியத்தின் பக்கம் நிற்கின்றார்கள். ஜனாதிபதி இந்த நாட்டின் அனைத்து மக்களுக்குமான தலைவர் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும். சிறுபான்மை மக்களின் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பிலும், அபிவிருத்திகு அப்பால் கவனம் செலுத்த வேண்டும். அவரது உரையில் கல்pவி, விவசாயம், பொருளாதாரம் தொடர்பில் நல்ல விடயங்கள் இருந்தாலும் சிறுபான்மை மக்கள் தொடர்பில் எதுவுமே இல்லை எனத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.