ஆவா குழுவை சேர்ந்தவர்கள் எனும் சந்தேகத்தில் ஆறுபேர் கைது!

ஆவா என அழைக்கப்படும் வினோதன் உள்பட 6 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் இன்றைய தினம் (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிறந்தாள் கொண்டாட்டம் ஒன்றுக்காக 12 பியர் ரின்களுடன் சென்று கொண்டிருந்த போது சந்தேக நபர்கள் 6 பேரும் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் வாள்வெட்டுக் குழு சந்தேக நபர்களுக்கு நீதிமன்றில் பிணையாக கையொப்பமிட்ட ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் தலா 3 வழக்குகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மானிப்பாய் பொலிஸார் கூறினர்.

மானிப்பாய் பொன்னாலை வீதி, துர்க்கா மில் பகுதியில் ஆவா வாள்வெட்டுக் குழுவின் வீனோதன் உள்பட 6 பேர் கூடியுள்ளனர் என்று இரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பி்ரகாரம் இன்று வியாழக்கிழமை பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் ஆவா வினோதன் உள்ளிட்ட 6 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.

ஆவா வினோதன் இணுவிலைச் சேர்ந்தவர். ஏனைய 5 பேரும் கைதடியைச் சேர்ந்தவர்கள். சந்தேக நபர்கள் தொடர்பில் மானிப்பாய் பொலிஸில் வழக்கு நிலுவைளோ அல்லது பிடியாணையோ இல்லை.

எனினும் சந்தேக நபர்களின் சந்தேகமான நடமாட்டத்தால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தொடர்பில் ஏனைய பொலிஸ் நிலையங்களில் வழக்கு நிலுவைகள் உள்ளனவா? என விசாரணைகள் நிறைவடைந்ததும் அவர்களை பிணையில் விடுவிப்பது தொடர்பில் ஆராயப்படும்.

இதேவேளை, வாள்வெட்டு வன்முறைக் கும்பல் ஒன்றின் சந்தேக நபர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு பீடிக்குள் கஞ்சா போதைப்பொருளை மறைத்து நுகர முயன்ற குற்றச்சாட்டில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக  மானிப்பாய் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.