போர்க் குற்றங்களை மூடிமறைக்க முடியாது; – குற்றவாளிகள் தப்பிப்பிழைக்கவும் முடியாது

போர்க் குற்றங்களை மூடிமறைக்க முடியாது; – குற்றவாளிகள் தப்பிப்பிழைக்கவும் முடியாது;
சரத் வீரசேகரவின் கருத்து பொன்சேகா பதிலடி

“இலங்கையில் இறுதிப் போரில் போர்க்குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றுள்ளன. அதற்கான ஆதாரங்கள் என்னிடமும் உள்ளன. எனவே, இவற்றை மூடிமறைக்க முடியாது. குற்றவாளிகளும் தப்பிக்க முடியாது.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இறுதிப் போரில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை எனவும், அரசு மீதும் இராணுவத்தினர் மீதும் பொய்க்குற்றச்சாட்டுக்களைத் தமிழ் அரசியல்வாதிகள் முன்வைக்க முடியாது எனவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இறுதிப்போரில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவங்களுக்கு ராஜபக்ச அரசே பொறுப்புக்கூற வேண்டும். அந்தக் கடமையிலிருந்து இந்த அரசு நழுவ முடியாது.

இராணுவத்தினரில் ஒரு சிலர் தவறிழைத்துள்ளார்கள். அவர்களுக்கு எதிராக அரசு விசாரணை நடத்த வேண்டும். உரிய தண்டனையையும் வழங்க வேண்டும். இல்லாவிடின் ஒட்டுமொத்த இலங்கை இராணுவத்துக்கும் சர்வதேச அரங்கில் அவப்பெயர் தொடந்து நிலைத்திருக்கும்.

குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்குப் பதவிகளை வழங்குவதால் அவர்களைக் காப்பாற்ற முடியாது. இலங்கை மீதான சர்வதேச சமூகத்தின் அழுத்தங்கள்தான் தொடர்ந்து அதிகரிக்கும். எனவே, இந்த விவகாரத்தில் ராஜபக்ச மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்”  – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.