தமிழ் தேசியக் கூட்டமைப்பை திட்டி தீர்ப்பதனால் பேரினவாதிகளை சந்தோசப்படுத்தலாமே தவிர தமிழ் மக்களுக்கு எதனையும் செய்து விட முடியாது – ஞா.ஸ்ரீநேசன்
தமிழ் மக்களினதும், தமிழ் தலைவர்களினதும் அர்ப்பணிப்பு மிக்க போராட்டங்கள் காரணமாக 13ஆவது அரசியல் திருத்தத்தின் ஊடாக சிங்கள மொழியோடு தமிழ் மொழியும் இலங்கையின் அரச கரும மொழியாக சேர்க்கப்பட்டதோடு, 16வது திருத்தத்தின் ஊடாக தமிழ் மொழி நிர்வாக, நீதி பரிபலான மொழியாகவும் அங்கிகரிக்கப்பட்டது.
இந்த அங்கிகாரத்தினை தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் பலர் விரும்பவில்லை. இதனை மாற்றி சிங்களம் மட்டும் தான் இருக்க வேண்டும் எனும் தோறணையில் கருத்துகளையும் வெளியிட்டு வருகின்றார்கள்.
அத்துடன் கிழக்கு மாகாணத்தின் தொல்லியல் இடங்களை அடையாளம் காணுதல் என்கின்ற செயலணியில் தற்போது மேலும் நான்கு பிக்குமார்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள்
எனவே இந்த நிலையில் தமிழ் அமைச்சர்களாக இருப்பவர்கள், இராஜாங்க அமைச்சர்களாக இருப்பவர்களுக்கு மிகவும் கவனமாக இந்த விடயத்தைக் கையாள வேண்டிய தேவை இருக்கின்றது. அமைச்சுப் பதவிகளை வெறுமனே அலங்காரத்திற்குரிய பதவிகளாக கருதி செயற்படாமல் தமிழ் மக்களை ஒடுக்கி சிங்கள மொழிக்கும், பௌத்த மதத்திற்கும் முன்னுரிமை வழங்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை தடுக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.
இதைவிடுத்து இக்கட்டான இந்த ஆட்சிக் காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பையோ, தமிழ் மக்களையோ திட்டி தீர்ப்பதனால் வெறுமனே பேரினவாதிகளை மாத்திரம் சந்தோசப்படுத்தலாமே தவிர இதனால் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்து விட முடியாது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் ஏகபிரதிநிதிகள் அல்லர் என்று நீங்கள் பெருமைப்படவோ, சந்தோசப்படவோ வேண்டாம். கடந்த காலங்களில் பௌத்தத்திற்கும், சிங்கள மொழிக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் செயற்பட்ட பேரினவாத அரசுகளுக்கு எதிராகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டு வந்துள்ளது. இவற்றை மக்கள் நன்கு அறிவர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு எனும் அடையாளத்தின் மூலமாக அரசியலுக்குள் பிரவேசித்தவர்கள் கூட இதனை நினைவில் கொள்ள வேண்டும். எனவும் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை