அட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் வகுப்பறை கட்டட பிரச்சினைக்கு தீர்வு.

அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டன் புனிதஜோன் பொஸ்கோ கல்லூரியில் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கோடியே 14 லட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டடம் இன்று (04) திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் திறந்து வைக்கப்பட்டன.

கடந்த மூன்று தசாப்த காலமாக புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியில் போதியளவு கட்டட  வசதிகள் இன்மையால் மாணவர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வந்தனர்;.

கடந்த காலங்களில் 75 வருடத்திற்கு மேல் பழமை வாய்ந்த தோமஸ் கட்டடத்தில் சுமார் ஆறு வகுப்புக்கள் பலகையினால் வேயப்பட்ட கட்டடத்திலேயே கல்வி கற்று வந்தனர். குறித்த கட்டடம் மிகவும் பழைமை வாய்ந்த நிலையில் மாணவர்களின் கல்வி செயற்பாட்டுக்கு உகந்த நிலையில் காணப்படவில்லை. இந் நிலையிலேயே கடந்த 2019 ஏப்ரல் மாதம் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் திட்டத்தின் கீழ் இந்த இரண்டு மாடிக் கட்டடம் நிர்மானப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

எனினும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும் கடந்த அரசாங்கத்தினால் உரிய நேரத்திற்கு கட்டடத்திற்குரிய நிதி  பெற்றுக்கொடுக்காததன் காரணமாகவும் கட்டட பொருட்களின் விலைகள் ஏற்றம் பெற்றமை காரணமாகவும், குறித்த கட்டடம் உரிய நேரத்திற்கு ஒப்படைக்கப்படைக்கப்படவில்லை. இந்நிலையில் அரசாங்கம்  உயர்தரம், சாதாரண தரம், தரம் ஐந்து வகுப்புக்கள் ஆகியன ஆரம்பிக்கப்பட்ட போதிலும் ஏனைய வகுப்புக்கள் கடந்த 02 ம் திகதியே ஆரம்பிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தன.

எவ்வாறான போதிலும்; பழைய கட்டடம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதால் அக் கட்டடத்தில் மாணவர்களை கற்பிததல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்த  முடியாது என பெற்றோர்கள் பாடசாலையில் கடந்த 02 ம் திகதி ஒன்று கூடி தெரிவித்தனர்.

புதிய கட்டடம் திறக்கும் வரை தங்கள் பிள்ளைகளை குறித்த கட்டடத்தில் கல்வி கற்க அனுமதிக்க முடியாது. என தெரிவித்ததனை தொடர்ந்து இது குறித்து அட்டன் வலயக் கல்விப்பணிப்பாளரினதும், இராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் கவனத்திற்கும் கொண்டு வந்தனர்.

அதனை தொடர்ந்து அவர், கல்வி திணைக்கள அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு குறித்த கட்டடத்தினை பாடசாலைக்கு ஒப்படைக்குமாறு தெரிவித்ததனையடுத்து குறித்த கட்டடம் ஒப்பந்தகாரர்களால் 03ம் திகதி உத்தியோகப் பூர்வமாக ஒப்படைக்கப்பட்டன. அதனை  தொடர்ந்தே குறித்த கட்டடம் திறந்து வைக்கப்பட்டன.

எனினும் இக் கட்டடத்திற்கு தேவையான தளபாடங்கள் ஏனைய கற்றல் கற்பித்தலுக்கு தேவையான உபகரணங்கள் இது வரை பெற்றுக்கொடுக்கப்படவில்லை. என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாடசாலையின் அதிபர் நரேந்திரன் ஜெயந்திநாத் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கட்டட திறப்பு விழாவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஸ்வரன், அட்டன் வலயக்கல்வி பணிமனையின் கல்விப்பணிப்பாளரும் காப்பாளருமான பி.ஸ்ரீதரன், உட்பட மக்கள் பிரதிநிதிகள், உதவிக் கல்விப்பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.