நாடாளுமன்றுக்குச் செல்வதற்கு அனுமதி கோரி பிரேமலால் மனு – திங்கட்கிழமை முடிவு (photo)

நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக அனுமதி தருவதற்கு  சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

இதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய, வெலிக்கடை சிறைச்சாலையின் அத்தியட்சகர், நாடாளுமன்ற பொதுச் செயலாளர் ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

தன் மீது கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, தனக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது எனவும், அத்தண்டனைக்கு எதிராக தான் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளார் எனவும் மனுதாரரான பிரேமலால் ஜயசேகர தெரிவித்தார்.

இந்தநிலையில், கடந்த பொதுத்தேர்தலில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்ட தன்னை, நாடாளுமன்ற அமர்வுகளுக்காக அழைத்துச் செல்ல, சிறைச்சாலை அதிகாரிகளினால் மறுக்கப்பட்டு வருகின்றது எனவும் பிரேமலால் ஜயசேகர குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பான முடிவு எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்று மேன் முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
………

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.