குடும்ப ஆட்சிக்காக அரசமைப்பு மாற்றம்: அனைத்து மக்களும் வெட்கப்படவேண்டும் – கடுமையாகச் சாடுகின்றது சஜித் அணி!!!!

“ராஜபக்ச அரசு குடும்ப ஆட்சிக்காக அரசமைப்பு திருத்தத்தையே மாற்ற முயற்சிப்பது தொடர்பில் நாட்டு மக்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டும்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

“20ஆவது திருத்தத்தில் 18ஆவது திருத்தத்திலுள்ள விடயங்களே உள்ளடக்கப்பட்டுள்ளது. தனிநபர் கையில் நாட்டின் அனைத்து அதிகாரங்களையும் பெற்றுக்கொடுக்கும் நோக்கத்திலே இந்தப் புதிய அரசமைப்பு திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“19 ஆவது திருத்தத்தை நீக்குவதே அரசின் பிரதான நோக்கமாக இருக்கின்றது. இந்தத் திருத்தமானது மக்கள் பக்கமிருந்து அவர்களுக்காகவே கொண்டுவரப்பட்டது. 1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை மாற்றியமைக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்து வந்த போதிலும் யாரும் அதனை மாற்றி அமைக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் தங்களது ஆட்சியில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை மாற்றியமைப்பதாக வாக்குறுதி வழங்கியிருந்த போதிலும், அவர்கள் அதனை நிறைவேற்றவில்லை.

மஹிந்த ராஜபக்ச அவருடைய ஆட்சிக் காலத்தில் 18 ஆவது அரசமைப்பு திருத்தத்தை நிறைவேற்றியிருந்தார். இதன்போது ஏற்கனவே இருந்த ஜனாதிபதி பதிவிக் காலத்தை மாற்றியமைத்து , நிறைவேற்று அதிகாரத்துக்கு மேலும் பலத்தைப் பெற்றுக்கொடுத்தார். இதனால் மக்களே அவரைப் புறக்கணித்தனர். அதற்குப் பின்னர் வந்த நல்லாட்சி அரசால் 19 ஆவது அரசமைப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டதுடன் இதற்கு நாடாளுமன்றத்தில் ஒருவர் மாத்திரமே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்தநிலையில் அரசு ஏன் 19 ஆவது அரசமைப்பு திருத்தத்தை நீக்குவதற்கு முயற்சித்து வருகின்றது? இந்தத் திருத்தத்தில் காணப்படும் சிக்கலான விடயங்களை நீக்கி அந்தத் திருத்தத்தையே தொடர்ந்தும் செயற்படுத்தலாம் அல்லவா?

20ஆவது அரசமைப்பு திருத்தம் என்று கூறிக் கொண்டு 18 ஆவது அரசமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களையே மீண்டும் கொண்டுவருவதற்கு அரசு முயற்சிக்கின்றது. இந்தநிலையில் ஆணைக்குழுக்களின் உறுப்பினர்களை நியமிப்பதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்தூக்கே காணப்படுகின்றது. ஆனால், புதிய அரசமைப்பு திருத்தத்தில் அந்தப் பொறுப்பு ஜனாதிபதிக்கு வழங்கப்படவுள்ளது. இதனால் ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் பெயரளவிலானதாகவே இருக்கும்.

கடந்த காலத்தில் அலரி மாளிகைக்கு ஒருவரை அழைத்து அவருக்கு உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் வழங்கப்பட்டிருந்தமை தொடர்பில் நாம் அறிந்துள்ளோம். மீண்டும் அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதற்காக வாய்ப்புகள் இருக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்சவுக்கு நாடாளுமன்ற உறுப்புரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே இந்த அரசமைப்பு திருத்தம் செய்யப்படப்போகின்றது. இந்தநிலையில் இது தொடர்பில் நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும். அமெரிக்கப் பிரஜை ஒருவரை நாடாளுமன்றத்தில் அமர்த்துவதற்காக அரசமைப்பு திருத்தத்தையே மாற்றியமைக்கத் தீர்மானித்தமை தொடர்பில் அமெரிக்க ஆதிக்கத்துக்கு எதிராகப் பேசிவரும் அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நானயக்கார மற்றும் அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதய கம்மன்பில ஆகியோர் அவர்களது நிலைப்பாட்டை நாட்டுக்குத்  தெரியப்படுத்த வேண்டும்.

அரசு மீண்டும் ஒரு தனிநபரின் கையில் அதிகாரங்களை ஒப்படைப்பதற்கே முயற்சிக்கின்றது. இந்தநிலையில் ஒருவர் கையில் அனைத்துப் பொறுப்புகளையும் பெற்றுக் கொடுத்து சர்வாதிகார ஆட்சியை செயற்படுத்துவதுதான் அரசின் நோக்கமாக இருக்கின்றதா என்று எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்