காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிவேண்டி பன்னாட்டு வாயில்களை நோக்கி போராட்டங்கள் !!

இலங்கைத்தீவில் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழ்உறவுகளுக்கு நீதிவேண்டி, கனேடிய பிரதமரின் வாயில்தளத்தினை நோக்கி நீதிக்கான நெடு நடைப்பயணம் ஒன்று இடம்பெற்று வருவதோடு, பல்வேறு புலம்பெயர்களிலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

வலிந்து காணாமற் ஆக்கப்பட்டோருக்கான உலக நாளாகிய கடந்த  ஓகஸ்ற் 30ஆம் நாள் பிரம்ரன் நகரசபை வாயிலில் இருந்து தொடங்கிய இந்த நெடு நடைப்பயணம் இன்று வெள்ளிக்கிழமை 6வது நாளினை எட்டியுள்ளது. 424 கிலோ மீற்றர்களை கடந்து ஒட்டவா நாடாளுமன்றத்தினை அடையவிருக்கின்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது கோரிக்கை மனுவினை நெடு நடைப்பயணத்தின் செயல்வீரர்கள், கனேடிய பிரதமர் ஐஸ்டின் ட்ருடோ அவர்களிடம் கையளிக்கவுள்ளனர்.

வலிந்து காணாமற் ஆக்கப்படுதல் என்பது அடக்குமுறையின் ஒரு வடிவமாக மட்டுமல்லாமல், அது இனஅழிப்பின் கருவியாகவும் உள்ளது என்பதனை சுட்டிக்காட்டும் இம்மனுவானது, தமிழர்கள் சிறிலங்கா அரசினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இனஅழிப்பினை குறித்துரைத்துக் கொள்வதோடு, அதற்கான பன்னாட்டு நீதியினை இந்நெடு நடைப்பயணத்தின் ஊடாக வலியுறுத்துகினற்து.ஒடுக்கும் அரசுகள் ஓவ்வொன்றும், திரைக்குப் பின்னால் சனநாயக விழுமியங்களையும், சட்டத்தின் ஆட்சியின்பால் மதிப்பையும், கிழித்தெறிந்து கொண்டே, பன்னாட்டு மனிதவுரிமை நெறிகளை மதிப்பது போல் நாடகமாடுகின்றன. சிறிலங்கா போன்ற இனவழிப்பு அரசுகளின் நிலை இதுவே.

சிறிலங்காவில் அரசு  வலிந்து ,காணாமற் ஆக்கப்படுதல்களைத், தமிழினவழிப்பின் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டது. வலிந்து காணாமற் போனவர்களைப் பற்றிய ஒரு தரவுத்தளத்தைப் பதிவேற்றுவதற்கென்று சொல்லி காணாமற் போனோர் அலுவலகம் ஒன்றை சிறிலங்கா நிறுவிய போதிலும், ஆயுத மோதலின் போது சரணடைந்தவர்கள், கைது செய்யப்பட்டவர்களின் பட்டியலை வெளியிடவே இல்லை.

இந்தச் செயலின்மையும், பொறுப்புக்கூறாமையும்  ஆண்டுக்கணக்கில் தொடர்வதை எதிர்த்து ஆயிரக்கணக்கான தாய்மார்கள் போராடி வருகின்றார்கள். அவர்களில் பலர் தங்கள் பிள்ளைகளுக்கு, உறவுகளுக்கு என்ன நேரிட்டது என்று தெரியாமலே கல்லறைக்குச் செல்லும் கொடுமைக்கு உற்படுத்தப்பட்டுளார்கள்! வலிந்து  காணாமல் ஆக்குதல் பற்றிய ஐ நா ஒப்பந்தத்தை சிறிலங்கா ஏற்று உறுதி பூண்ட போதிலும், குறிப்பாக உறுப்பு 31க்கு மட்டும் ஆதரவளிக்காமல் ஒதுங்கிக் கொண்டது.

இந்த உறுப்புதான் இந்த ஒப்பந்தத்தைத் தங்கள் நாடு மீறியது குறித்து பாதிப்புற்றவர்கள் தாமே வலிந்து காணாமற் ஆக்கப்படுதல் பற்றிய குழுவிடம் பேச வாய்ப்பளிப்பதாகும். இந்தக் காரணத்தால் தான் ஈழத் தமிழர்களுக்கும், உலகெங்கும் வலிந்து காணாமற் ஆக்கப்பட்டவர்களினால் பாதிப்புற்ற அனைவருக்கும் உங்கள் ஆதரவு தேவை என கனேடிய பிரதரை நோக்கி இந்நெடு நடைப்பயணம் கோருகின்றது.

இதேவேளை, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி , ஒஸ்றேலியா , அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் வலிந்து காணாமற் ஆக்கப்பட்டோருக்கான உலக நாளாகிய கடந்த  ஓகஸ்ற் 30ஆம் நாளன்று கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.