வீதிகளில் மண், கல் குவித்து வைப்போர் மீது சட்ட நடவடிக்கை; படிக்கட்டுகளை உடைத்தகற்ற ஒரு வார கால அவகாசம்; கல்முனை மாநகர சபை தீர்மானம்!!!

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட வீதிகளில் பொது மக்களின் போக்குவரத்துகளுக்கு இடையூறுகளையும் விபத்துக்களையும் உயிராபத்துகளையும் ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் முறையற்ற செயற்பாடுகளுக்கு எதிராக சம்மந்தப்பட்டோர் மீது சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு மாநகர சபை தீர்மானித்துள்ளது.

கல்முனை மாநகர சபையில் இன்று மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம் றகீப் தலைமையில் நடைபெற்ற முகாமைத்துவக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வீடுகள் மற்றும் கட்டிட நிர்மாணங்களுக்காக பொது வீதிகளில் சீமெந்து கலவையிடல், கொங்க்ரீட் இடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல், கல், மண், கொங்க்ரீட் கற்கள் மற்றும் நிர்மாணப் பொருட்களை குவித்து வைத்தல் போன்ற செயற்பாடுகளினாலும் வீடுகளுக்கான படிக்கட்டுகள் வீதிகளில் அமைக்கப்பட்டிருப்பதாலும் பொது மக்களின் போக்குவரத்துகள் பெரிதும் பாதிக்கப்படுவதுடன் வாகன நெரிசல் ஏற்படுவது மாத்திரமல்லாமல் சில சந்தர்ப்பங்களில் உயிராபத்துகளும் ஏற்படுவதாக கல்முனை மாநகர சபைக்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருகின்றன.

இவற்றைக் கவனத்தில் கொண்டு, மேற்படி செயற்பாடுகளைக் கண்காணித்து, நடவடிக்கை எடுப்பதற்காக மாநகர சபையில் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டு, அதன் ஊடாக மாநகர சபைகள் கட்டளை சட்டம் 77 மற்றும் 78 பிரிவுகளின் கீழ், இச்செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கெதிராக கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, தண்டனை பெற்றுக் கொடுக்கப்பதற்கும் அபராதம் விதிப்பதற்கும் இதனால் ஏற்படும் செலவுகளை அவர்களிடமிருந்து அறவிடுவதற்கும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆகையினால் வீதிகளில் பொறுப்பற்ற முறையில் முன்னெடுக்கப்படும் மேற்படி செயற்பாடுகளை கண்டிப்பாக தவிர்ந்து கொள்ளுமாறு கட்டளையிடப்படுவதுடன் வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுப் படிக்கட்டுகளை ஒரு வார காலத்தினுள் உடைத்தகற்றி விடுமாறு சம்மந்தப்பட்டோருக்கு மாநகர சபையினால் பகிரங்க அறிவித்தல் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. இக்கட்டளை உதாசீனம் செய்யப்படுமாயின் மேற்கூறிய பிரிவுகளின் கீழ் சம்மந்தப்பட்டோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் என்பதுடன் அவற்றை அகற்றுவதற்கான செலவுகளும் அறவிடப்படும் என மாநகர சபை அறிவித்துள்ளது.

அத்துடன் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட வீதிகளில் திருமணம் உள்ளிட்ட வைபவங்களுக்கு கூடாரங்கள் அமைப்பதாயின் மாநகர சபையிடமிருந்து முறையான அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அனுமதி பெறாமல் வீதிகளில் கூடாரங்கள் அமைக்கப்படுமாயின் சம்மந்தப்பட்டோர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகர சபை மேலும் அறிவித்துள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.