மாநகர சபையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: முதல்வர் சரவணபவன்!!!

மட்டக்களப்பு மாநகருக்குள் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு பொதுமக்கள் தமது பூரண ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகர சபையின் 37வது சபை அமர்வானது இன்று (10) வியாழக்கிழமை காலை மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.

இவ் அமர்வில் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், ஆணையாளர் கா.சித்திரவேல், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா மாநகர சபையின் உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த அமர்வில் நிதிக்குழு உள்ளிட்ட குழுக்களின் சிபாரிசுகள், மாதாந்த வரவு செலவு அறிக்கை தொடர்பான விடயங்கள் மற்றும் மாதாந்த கொடுப்பனவு உட்பட கொள்வனவு விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் அதற்கான அனுமதிகளும் சபையில் வழங்கப்பட்டன.

அத்துடன் மாநகருக்குள் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் தனது அறிவிப்புகள் ஊடாக முதல்வர் கருத்துத் தெரிவித்தார். குறிப்பாக மணல் வீதியில்லா மாநகரம் எனும் செயற்றிட்டத்தின் ஊடாக வீதிகளை செப்பனிடல் மற்றும் மாநகர சபையின் சொந்த நிதியில் மேற்கொள்ளப்படும் துரித வீதி அபிவிருத்தி பணிகள் உள்ளிட்ட வாழ்வாதார உதவிகள் தொடர்பிலும் உறுப்பினர்களுக்கு தெளிவுறுத்தியிருந்தார்.

மேலும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வரும் பன்சலை வீதி, பிள்ளையாரடி வெல்லங்குடா வீதி, அருணகிரி வீதி, கிழக்கு பல்கலைக்கழக வீதி மற்றும் கல்லடி விபுலானந்தா அவனியு உள்ளிட்ட 11 வீதிகள் பொதுமக்களின் நன்மை கருதியும் போக்குவரத்து நெருசலினை கருத்தில் கொண்டும் விஸ்தரிக்கப்பட்டு அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்.

இப் பணிகள் தூர நோக்குடனும், வாகன நெரிசலினை குறைத்து போக்குவரத்தினை இலகுபடுத்தும் நோக்குடனுமே மேற்கொள்ளப்படுகின்றன. இதனை பொதுமக்கள் உணர்ந்து குறித்த பணிகளை துரிதமாக நிறைவுசெய்வதற்கு பூரண ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.