கல்முனை கிரீன்பீல்ட் பகுதியில் கொட்டப்படும் திண்மக்கழிவுகளை உடனுக்குடன் அகற்றுவதற்கான பொறிமுறை வகுக்கப்படும்

கல்முனை கிரீன்பீல்ட் வீட்டுத்தொகுதிக்குப் பின்னால் அமைந்துள்ள பகுதியில் கொட்டப்பட்டிருந்த திண்மக்கழிவுகள் நேற்று வெள்ளிக்கிழமை கல்முனை மாநகர சபையினால் முற்றாக அகற்றப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இத்திண்மக்கழிவுகளினால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் இக்கழிவுகளை நோக்கி யானைகள் படையெடுப்பதாகவும் இதனால் மக்கள் பல்வேறு அசௌனகாரியங்களை எதிர்நோக்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதையடுத்து மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களின் அவசர அறிவுறுத்தலின் பேரில் மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பர் ஆகியோரின் மேற்கொண்ட அவசர நடவடிக்கையின் பயனாக மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினால் இக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

கல்முனைப் பிரதேசத்தில் நாளாந்தம் சேகரிக்கப்படுகின்ற திண்மக்கழிவுகள் கிரீன்பீல்ட் வீட்டுத்தொகுதிக்கு பின்னால் குறித்தொதுக்கப்பட்டுள்ள இடத்தில் தற்காலிகமாக ஒன்றுசேர்க்கப்பட்டு, பின்னர் அவை அங்கிருந்து பெக்கோ இயந்திரத்தின் உதவியுடன் ட்ரம் ட்ரெக் வாகனங்களில் ஏற்றப்பட்டு, அட்டாளைச்சேனை, பள்ளக்காடு பகுதிக்கு அனுப்பப்படுவது வழக்கமாகும். எனினும் பெக்கோ இயந்திரம் பழுதடைகின்ற சில சந்தர்ப்பங்களில் இக்கழிவுகளை முகாமைத்துவம் செய்வதிலும் அவற்றை உரிய நேரத்தில் பள்ளக்காட்டுப் பகுதிக்கு அனுப்புவதிலும் சில தடங்கல்கள் ஏற்படுகின்றன.

இவ்வாறான ஒரு பிரச்சினை காரணமாகவே கல்முனை கிரீன்பீல்ட் வீட்டுத்தொகுதிக்குப் பின்னால் அமைந்துள்ள பகுதியியிலிருந்து திண்மக்கழிவுகளை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டதாக கல்முனை மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பர் தெரிவித்தார்.

எனினும் எதிர்வரும் காலங்களில் இப்பிரச்சினைகள் ஏற்படாமல் இவ்வேலைத் திட்டத்தை சிறப்பாக முன்னெடுப்பதற்குரிய பொறிமுறையொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளரின் ஆலோசனை, வழிகாட்டல்களுடன் மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு கவனம் செலுத்தி வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

கல்முனை மாநகர வாழ் மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கு எமது மாநகர சபை மிகவும் பொறுப்புடன் முன்னிற்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.