விக்னேஸ்வரன் மீதான வழக்கை விலக்கிக்கொள்ள டெனீஸ் மறுப்பு!!!

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மீது தொடுத்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வாபஸ் பெறுவதாக வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஏற்கனவே தெரிவித்திருந்த போதிலும், இன்று காலை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது அதனை வாபஸ் பெறுவதற்கு டெனீஸ்வரன் தரப்பு மறுத்துவிட்டது.

சமரசமாகத் தீர்பதற்கு டெனீஸ்வரன் தரப்பில் முன்வைக்கப்பட்ட மூன்று நிபந்தனைகளை ஏற்பதற்கு விக்னேஸ்வரன் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். குறிப்பாக தன்னால் மன்னிப்புக் கேட்க முடியாது என்பதை அவர் உறுதியாகக் கூறிவிட்டார். இதனையடுத்து இந்த வழக்கு மீதான விசாரணை நாளையும், நாளைமறுதினமும் நடைபெற்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

சட்டத்தரணி டெனீஸ்வரன், முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராகத் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மீளப்பெறுமாறு அரசியல் அவதானிகள், தமிழ்த் தேசிய ஆர்வலர்கள் மற்றும் தமிழ் சட்டத்தரணிகள் பலர் அவரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

சட்டத்தரணி டெனீஸ்வரன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தவறானது என்றும் அவரை மீள அமைச்சராக உள்வாங்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் 29.06.2018 அன்று வழங்கிய இடைக்காலக் கட்டளையை செயற்படுத்த தவறிவிட்டார் என சட்டத்தரணி டெனீஸ்வரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றை முன்னாள்முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராகத் தாக்கல் செய்திருந்தார்.

பிரதான வழக்கில் சட்டத்தரணி டெனீஸ்வரன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தவறானது என வடக்கு  மாகாண சபை கலைக்கப்பட்டதன் பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் 05.08.2019 அன்று தீர்ப்பளித்தது.

இடைக்காலக் கட்டளையைச் செயற்படுத்த விக்னேஸ்வரன் தவறிவிட்டார் என்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்காக இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

விக்னேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அவர் நாடாளுமன்றில் ஆற்றிய உரைகள் காரணமாக சிங்கள அதிதீவிர சக்திகளின் கோபத்துக்கு அவர் ஆளாகியுள்ளார். அத்தரப்புக்கள் இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தற்போது கூர்ந்து அவதானிக்கத் தொடங்கியுள்ளனர்.

இவ்வழக்கில் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் குற்றவாளியாகக் காணப்பட்டால் அவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க வேண்டி வரும் என்ற நிலையை இத்தரப்பினர் பெரிதும் விரும்புகின்றனர்.

இந்தநிலையில், “கட்சி வேறுபாடுகளுக்கப்பால் தமிழ் அரசியல்வாதி தொடுத்த வழக்கால் ஒரு முன்னாள் நீதியரசர் – முன்னாள் முதலமைச்சர் குற்றவாளியாகக் காணப்பட்டார் என்றோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார் என்றோ இழிநிலை ஏற்படக்கூடிய சந்தர்ப்பத்தைத் தவிர்ப்பது அவசியம். சட்டத்தரணி டெனீஸ்வரன் இன்றைய அரசியல் சூழலைக் கருத்தில்கொண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கைப் பெருந்தன்மையாக கைவாங்க வேண்டும். அப்படி அவர் செய்தால் அவர் மீதான நன் மதிப்பு உயரும்” எனவும் பலரும் டெனீஸ்வரனுக்குத் தெரியப்படுத்தியிருந்தனர்.

இதற்குத் தனது முகநூல் பக்கத்தில் பதிலளித்த டெனீஸ்வரன், “கடந்தவை கடந்தவையாகவே இருக்கட்டும். இன்று எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் கதைக்காத ஒரு விடயத்தை எமது முன்னாள் முதலமைச்சர் சபையில் உரக்கச் சொல்லி இருக்கின்றார். முதற்கண் அதற்குத் தலைவணங்குகிறேன். இதனை எமது இனம் சார்ந்த ஒரு விடயமாகவே நான் பார்க்கின்றேன். அதன் பொருட்டு அவருக்குப் பக்கபலமாக நான் எப்போதும் இருப்பேன்” என்று தெரிவித்திருந்தார். அதேவேளையில், இந்த வழக்கைத் தான் வாபஸ் பெறுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்தநிலையில், இன்று காலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, டெனீஸ்வரன் தரப்பு மூன்று நிபந்தனைகளை முன்வைத்தது. விக்னேஸ்வரன் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும், வழக்கின் செலவுத் தொகையை முழுமையாகத் தரவேண்டும், உயர்நீதிமன்றத்தில் விக்னேஸ்வரன் தரப்பால் டெனீஸ்வரனுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். மன்னிப்புக் கேட்பதற்கு விக்னேஸ்வரன் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்தநிலையில், வழக்கு விசாரணை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
………

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.