அரசமைப்பின் ’20’ திருத்த வரைவு குறித்த ஐ.நாவின் கருத்துக்கள் தேவையற்றவை: – மிச்செல் பச்லெட் அம்மையாருக்கு – இலங்கை பதிலடி!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் இலங்கை குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்களுக்குக் கண்டனம் வெளியிட்டுள்ள அரசு, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்த ஆணையாளரின் கருத்துக்கள் தேவையற்றவை எனவும் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பதில் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி டயானி மென்டிஸ் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் உரையாற்றும்போது இதனைக் கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது :-

“நாடாளுமன்றத்தின் ஊடாக சமர்ப்பிக்கப்படும் அரசமைப்பின் 20ஆவது திருத்தம் குறித்து ஜனநாயக நiடைமுறைகளின் பின்னர் விவாதங்கள் இடம்பெறும். இதன்போது இதனுடன் தொடர்புபட்ட அனைவரும் தங்கள் கருத்துக்களை முன்வைப்பதற்கான வாய்ப்புக் கிடைக்கும்.

இதன்காரணமாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் 20ஆவது திருத்தம் குறித்த கருத்து தேவையற்றது. அனுமானத்தின் அடிப்படையில் முன் தீர்ப்பை எவரும் வழங்கக்கூடாது.

முன்னாள் இராணுவ சார்ஜன்ட்டுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பு இலங்கை அரசமைப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் ஏற்பாடுகளின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டது என்பதை இலங்கை அரசு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றது.

முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள போலியான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு நிராகரிக்கின்றது.

இந்தக் குற்றச்சாட்டுக்களின் நம்பகத்தன்மையை இலங்கை அரசு தொடர்ச்சியாக நிராகரித்து வந்துள்ளது. இந்தக்  குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குறிப்பாக உள்நாட்டுப் போரின் இறுதித் தருணங்கள் குறித்து கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு, பரணகம ஆணைக்குழு போன்ற உள்நாட்டுக் குழுக்கள் ஆராய்ந்துள்ளன. அந்தக் குழுக்களால் இந்த இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகக் குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் எவற்றையும் கண்டுபிடிக்கமுடியவில்லை என்பதை அரசு மீள வலியுறுத்த விரும்புகின்றது.

ஆகவே, குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் இல்லாததன் காரணமாக இந்தச் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிரான தொடர்ச்சியான போர்க்குற்றச்சாட்டுக்களும், மனித குலத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இவை இயற்கை நீதிக்கொள்கைக்கு முரணாணவை என இலங்கை கருதுகின்றது.

ஐ.நா. தீர்மானத்திலிருந்து இலங்கை விலகியுள்ள போதிலும் இலங்கையின் அரசமைப்பு கட்டமைப்புக்குள் நல்லிணக்கம், பொறுப்புக்கூறுதல், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை அரசின் கொள்கைக்கு ஏற்ப உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட நடைமுறை மூலம் முன்னெடுப்பது குறித்து அரசு அர்ப்பணிப்புடன் உள்ளது” – என்றார்.

இராணுவக் கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், அரசு ஏற்கனவே இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்