கடற்றொழில் திணைக்களம் மற்றும் கடற்படையைக் கடிந்ததுடன், பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டுமென மீனவர் ஒத்திழைப்பு இயக்கத்தை கோரினார் – ரவிகரன்.

முல்லைத்தீவு – மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை உரிய முறையில் கட்டுப்படுத்த, கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களமோ, அல்லது கடற்படையோ உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிரன் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதேவேளை தேசிய மீனவர் இயக்கம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் இத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுக்கும், காணிவிடுவிப்பு விடயங்களுக்கும் உரிய தீர்வுகளைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வுக் கலந்துரையாடல் ஒன்று 19.09.2020 நேற்றையநாள், முல்லைத்தீவு செஞ்சிலுவைச் சங்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

எமது மீனவ மக்கள் சட்டங்களை உரியமுறையில் நிலைநாட்டுங்கள் என்றே சொல்கின்றனர். அதாவது சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளை நிறுத்துவதை நடமுறைப் படுத்துமாறே கேட்கின்றனர்.

இங்கு பரிய அளவில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. அந்த விடத்தினை கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் இங்கே வெளிப்படுத்துங்கள். சமாளித்து இங்கு இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை மூடி மறைக்கவேண்டாம்.

சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைச் செய்கின்ற சங்கங்களையோ, சங்க நிர்வாகிகளையோ, கடல் தொழில் நீரியல் வளத் திணைக்களத்தினால் ஏன் தடுக்க முடியாதுள்ளது.

குறிப்பாக இந்த வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடிக்கும் விடயத்தில் கூட, ஓரிரு படகுகள் வெளிச்சம் பாய்ச்சி மீன் பிடிக்கும் தொழிலை செய்யும்போது கடற்றொழில் நீரில்வளத் திணைக்களம் சட்ட நடவடிக்கை மேற்கொண்டிருந்தால், தற்போது ஆயிரம் படகுகளுக்குமேல் வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடிக்கும் தொழிலை மேற்கொண்டிருக்க மாட்டாது.

இந்த தொழிலைக் கட்டுப்படுத்துவதில் கடற்படையினர் ஒரு பக்கச் சார்பாக நடந்துகொள்கின்றனர். குறிப்பாக எமக்கும் எமது மீனவர்களுக்கு எதிராகவுமே கடற்படையினர் செயற்படுகின்றனர்.

கடல்பரப்பு கடற்படையினரின் ஆளுகைக்குட்பட்டது எனில், கடலில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை அவர்கள் தானே கட்டுப்படுத்தவேண்டும்.

அவ்வாறு கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தினாலும், கடற்படையினராலும் சட்டவிரோத கடற்தொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை எனில், எமது மக்களிடம் அந்த விடயத்தினை ஒப்படையுங்கள். கடற்படை மற்றும் நீரியல் வளத் திணைக்களம் எமது மக்களுக்கு பாதுகாப்பளியுங்கள் . எமது மக்கள் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்குரிய செயற்பாடுகளைச் செய்வார்கள்.

அதேவேளை மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் குறித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுக்கெதிராக மிக விரைவாக, நீதிமன்றில் வழக்குத் தொடரவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

அதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள காணிப்பிரச்சினைகள், கடற்றொழில் பிரச்சினைகள் என்பவற்றினை தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் உரிய இடத்திற்கு கொண்டுசெல்லவேண்டும்.

அல்லது அரசதலைவரைச் சந்தித்து இந்த விடயங்களை அவரிடம் தெரிவியுங்கள். இல்லாவிட்டால் இங்குள்ள பாதிக்கப்பட்டவர்களை அழைத்து சென்று உரிய அதிகாரிகளுடன் பேசி, இந்த பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் முயற்சி எடுங்கள்.

இந்த மக்கள் தமது வறுமையையும், தாம் எதிர்நோக்கவுள்ள பட்டினிச் சாவினையும், தமது இயலாமையையும் உங்களிடம் தெரிவிக்கின்றனர்.

எமது பிரச்சினைகளில் ஒருபிரச்சினைக்காவது, மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினால் தீர்வு பெற்றுத்தர முடியுமாக இருந்தால் உங்களுடைய தொடர்ச்சியான செயற்பாடுகளுக்கு எமது ஆதரவுகளை நல்குவோம் – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.