வரலாற்றில் முதற்தடவையாக பெரும் போக நெற் செய்கைக்கு இலவச உரம் – அங்கஜன் தெரிவிப்பு!!!

சீலக்ஸ் காற்றலை நிறுவனத்தின் உதவியோடு அமைக்கப்பட்ட மறவன்புலோ கமக்கார அமைப்பு அலுவலகமும் அதனோடு இணைந்த உரக் களஞ்சியமும் மக்கள் மயப்படுத்தும் நிகழ்வு இன்று (20) காலை 10.30 மணிக்கு மறவன்புலோ கமக்கார அமைப்பின் தலைவர் சி.திருஞானசம்மந்தர் தலைமையில் மறவன்புலோவில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் கமத்தொழில் பிரதியமைச்சரும் தற்போதைய யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத்தலைவரும் பாராளுமன்றக்குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் கலந்துகொண்டு மறவன்புலோ கமக்கார அமைப்பு அலுவலகத்தை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக திரு R.நிசாந்தன் (பிரதி ஆணையாளர் – கமநல அபிவிருத்தித் திணைக்களம், யாழ்ப்பாணம்) திருமதி P.தெய்வநாயகி (உதவி ஆணையாளர் – கமநல அபிவிருத்தி திணைக்களம் – யாழ்ப்பாணம்) திரு . K.கோகுலன் (பெரும்போக உத்தியோகத்தர்- கமநல சேவை நிலையம் – கைதடி) , திரு. செல்வராஜா சுபச்செல்வன் (தென்மராட்சி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர்), திரு.ஜெயந்த கமகே (நிர்வாக இயக்குனர் – சீலக்ஸ் காற்றலை நிறுவனம்) திரு . சமீர கனேகொட (பணிப்பாளர்- சீலக்ஸ் காற்றலை நிறுவனம் ) திரு S. ஸ்ரீதரன் (ஆலோசகர் அதிகாரி சீலக்ஸ் காற்றலை நிறுவனம்) திரு P. ஜேம்ஸ் ரஜி (திட்ட முகாமையாளர்- சீலக்ஸ் காற்றலை நிறுவனம்), தங்கவேலு (சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர்), சாவகச்சேரி பொலிஸ் அதிகாரிகள், அரச அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

கட்டிடதிறப்பு விழாவை தொடர்ந்து கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களால் சம்பிரதாயபூர்வமாக இம்முறை பெரும் போக நெற் செய்கைக்கான உழுது, விதைப்ப, நடவடிக்கைகளை ஆரம்பித்துவைத்தார்..

தொடர்ந்து உரையாற்றிய அங்கஜன் இராமநாதன்;-

இக்கட்டிடத்தின் மூலம் யாழ் மாவட்டத்தின் முன்னோடியான கமக்கார அமைப்பாக நீங்கள் திகழ வேண்டும். ஒவ்வொரு விவசாயிகளும் மழை, வெய்யில் பாராது தமக்காக உழைக்கவில்லை நாட்டுக்காக சேவையாற்றுகிறீர்கள் என்பதே உண்மையாகும். விவசாயிகள் சேற்றில் கால் வைத்தாலே நாம் அனைவரும் சோற்றில் கை வைக்க முடியும் என்பது கூற்று மட்டுமல்ல அதுவே நிதர்சனம்.

நமது ஐனாதிபதி அதிமேதகு கோட்டபாய ராஜபக்க்ஷ அவர்கள் விவசாயதுறையில் எமது நாடு முன்னேற்றம் அடையவேண்டும் என சிந்தித்துகொண்டிருக்கிறார். விவசாயிகளின் குடும்பங்களும் அவர்களது சமூகங்களும் நாட்டின் முன்னேற்றகரமான நிலைக்கு வரவேண்டும் என்பதே அவரது நோக்கு! சென்ற வாரம் வருகை தந்த கமத்தொழில் அமைச்சர் மாண்புமிகு மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் “சுபீட்சத்தின் நோக்கில் கமத்தொழில் மறுமலர்ச்சி” திட்டத்தின் ஊடாக பல விவசாய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்க போவதாக கூறியிருந்தார்.

அவர் வருகை தந்து சென்ற சொற்ப தினங்களுக்குள்ளேயே இம்முறை பெரும் போக நெற்செய்கைக்கு வரையறையற்ற அளவு உரம் இலவசமாக கமநல சேவை நிலையங்களின் ஊடாக பெற்றுகொள்ள முடியும். அத்தோடு மேட்டு நிலப்பயிர்களுக்கு மானிய அடிப்படையில் ரூபாய் 1500/= க்கு தேவையான அளவு உரம் பெற்று கொள்ள முடியும் என அறிவித்துள்ளார். இவை விவசாய பெருமக்களுக்கு கிடைத்த பெரும் வரப்பிரசாதங்கள் ஆகும். புதிய அரசாங்கத்துடன் எங்களுக்கு தேவையானவற்றை பெற்று பொருளாதார ரீதியில் முன்னேறி செல்வோம்.

மற்றும் அபிவிருத்தி திட்டம் ஒன்று வந்த போது நீங்கள் இந்த காற்றாலை செயற்திட்டத்திற்கு பின்வாங்கினீர்கள். மக்களுக்கு பொறுப்புகூறக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அந்த காலகட்டத்தில் நிறுவனத்தினருக்கும் தங்களுக்குமான இணைப்பை ஒரு கூட்டம் ஒன்றை நடாத்தி தங்களுக்கு இதனால் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை எடுத்து காற்றாலை நிறுவனம் தமது பிரதேசங்களுக்கு அபிவிருத்தி திட்டங்கள் ஏற்படுத்தி தருமாறு பணிப்பு விடுத்திருந்தேன்.

இரு தரப்பினருக்கும் ஓர் சிறந்த இணக்கத்தை ஏற்படுத்தியதன் பலனாக இன்று ஒரு முரண்பாடற்ற வெற்றிகரமான பாதையில் அனைவரும் பயணித்துகொண்டிருக்கிறீர்கள். ஒத்துழைப்பு வழங்கிய அனைத்தரப்பினருக்கும் நன்றிகள்.

தொடர்ந்தும் இந்த காற்றாலை நிறுவனம் இப்பகுதி மக்களுக்கும் இப் பிரதேசத்திற்கும் சேவையாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அத்தோடு இக் காற்றாலை நிறுவனத்தால் வரும் இலாபத்தில் ஒரு பங்கை இவ் வறிய மக்களுக்காக செலவு செய்வீர்கள் என நம்புகிறேன். மற்றும் இந்த உரக்களஞ்சியத்திறகும் கமக்கார அமைப்புக்கும் காணியை வழங்கியவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். -என்றார்.

தொடர்ந்து உரையாற்றி கமக்கார அமைப்பின் செயலாளர் சி.சிவாகுலன் 2009ம் ஆண்டு வரை மின்சாரம் இல்லாது இருந்த எமது கிராமம் 2019ம் ஆண்டு யாழ் மாவட்டத்திற்கே மின்சாரம் வழங்குவதை எண்ணி மகிழ்வடைகிறோம்.

இவ் அபிவிருத்திதிட்டத்தை சிறப்பாக முன்னேடுக்க உதவிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார்.

தொடர்ந்து மறவன்புலோ கமக்கார அமைப்பு அலுவலகமும் அதனோடு இணைந்த உரக் களஞ்சியத்தையும் சுற்றி விருந்தினர்களால் பயன்தரு மரக்கன்றுகள் நாட்டிவைக்கப்பட்டு கௌரவ அங்கஜன் இராமநாதனால் அப் பகுதி விவசாயிகளுக்கு 300 பழமரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.