ஐ.நா. சபைக்கான இலங்கைத் தூதுவராக மொஹான் பீரிஸ்!!

முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக  நியமிக்கப்படவுள்ளார் என்று நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

தற்போது ஐ.நாவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகப் பணியாற்றிவரும் ஷேனுகா செனவிரத்ன இலங்கைக்கு மீள அழைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தொழில்சார் வெளிநாட்டு சேவை பணியாளராகப் பணியாற்றி வரும் ஷேனுகா செனவிரத்ன கடந்த ஜுன் மாதத்தில் தனது 60ஆவது வயதைப் பூர்த்தி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டுச் சேவையினூடாக தொழில்சார் ரீதியில் இராஜதந்திரிகளாக பணியாற்றி வருபவர்களை 60 வயதுடன் ஓய்வுபெறுமாறு வெளிநாட்டு அமைச்சு வலியுறுத்தி வரும்போதும் அரசியல் நியமனங்களின் அடிப்படையில் இராஜதந்திரிகளாகப் பணியாற்றுகின்றவர்கள் 60 வயதைக் கடந்தும் பணியாற்றுவதுடன் புதிதாக நியமனங்களையும் பெற்று வருவது சுட்டிக்காட்டத்தக்கது.

வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரங்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்படவுள்ள 8 பிரமுகர்கள் 18 பேரைக் கொண்ட உயர் பதவிகளுக்கான குழுவின் முன்பாக நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவை அண்மையில் சபாநாயகர் நியமித்திருந்தார். இந்தக் குழு வெளிநாட்டுத் தூதுவர் பதவிக்குப் பிரேரிக்கப்பட்டவர்களின் தகைமைகளை விபரமாக ஆராய்ந்து அவர்கள் பொருத்தமானவரா? இல்லையா? என்பதைத்  தீர்மானிக்கும்.

இந்த 8 பிரமுகர்களின் பெயர்கள் பட்டியலில் முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸின் பெயர் முன்னதாக இடம்பெறவில்லை. அவரது பெயர் பின்னரே பரிந்துரைக்கப்பட்டமையே இதற்குக் காரணமாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.