20ஆவது திருத்தத்துக்கு எதிராக இதுவரை 14 மனுக்கள் தாக்கல் !!!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான புதிய அரசு கொண்டுவந்திருக்கும் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இதுவரை 14 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அரசமைப்பின் 20ஆவது திருத்த சட்ட வரைவைச் சவாலுக்குட்படுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சார்பில் நேற்றுமுன்தினம் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சார்பிலும் இவ்வாறு மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில்,20 ஆவது திருத்தச் சட்ட வரைவின் சில சரத்துக்கள் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் எனத் தீர்ப்பொன்றை வழங்குமாறு கோரி முன்னாள் ஆளுநரும் மற்றும் கபே அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான ரஜித் கீர்த்தி தென்னக்கோனால் உயர்நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவின் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.

20 ஆவது திருத்தச் சட்ட வரைவில் உள்ளடக்கப்பட்டுள்ள சில சரத்துக்களின் ஊடாக இந்த நாட்டு அரசமைப்பு கடுமையாக மீறப்படுகின்றது என அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அதன் காரணமாக குறித்த சரத்துக்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக நாடாளுமன்றின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மாத்திரம் போதாது எனவும், அது சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப் படவேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, குறித்த சட்டமூலத்தின் சர்ச்சைக்குரிய சரத்துக்களை நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமானால் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லுமாறு உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு அவர் உயர்நீதிமன்றில் கோரியுள்ளார்.

அரசால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவைச் சவாலுக்கு உட்படுத்தி நேற்றுமுன்தினம் 6 மனுக்களும், நேற்று 8 மனுக்களும் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, இதுவரை 14 மனுக்கள் 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.