கல்முனை மாநகர முதல்வருடன் இராணுவ அதிகாரிகள் சந்திப்பு!!!

கல்முனை மாநகர சபை எல்லைக்குள் எதிர்வரும் 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இராணுவத்தினரும் மாநகர சபையும் இணைந்து முன்னெடுக்கவுள்ள திண்மக்கழிவகற்றல் விசேட வேலைத்திட்டம் தொடர்பாக மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களை இராணுவ அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

மாநகர முதல்வர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (30) இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனைப் பிராந்திய இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மேஜர் எம்.தர்மசேன உள்ளிட்ட படையதிகாரிகளும் மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், பிரதி ஆணையாளர் எம்.ஐ.பிர்னாஸ், கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக், பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பர், சுகாதாரப் பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.ஏ.எம்.அஹ்சன் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது குறித்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்காலங்களில் கல்முனை மாநகர பிரதேசங்கள் அனைத்தையும் குப்பை கூழமில்லாமல் சுத்தமாக பேணுவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் அறிவுறுத்தலின் பேரில் ‘சேர்ந்து காப்போம்’ ‘பாதையில் குப்பை போட வேண்டாம்’ எனும் தொனிப்பொருளில் கிழக்கு மாகாணம் பூராவும் பிரதான வீதிகளை மையப்படுத்தி எதிர்வரும் 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.