திலீபனின் போராட்டத்தை கொச்சைப்படுத்தவில்லை – வியாழேந்திரன்!!!

திலீபனின் போராட்டம் ஒரு சமூகத்தின் விடுதலைக்கான போராட்டம் எனவும் அதற்கான கௌரவத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்றும் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் தெரித்துள்ளார்.

அத்துடன், தியாகி திலீபனின் அகிம்சைவழிப் போராட்டத்தை தாங்கள் ஒருபோதும் கொச்சைப்படுத்தியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு இன்று (04) மட்டக்களப்பு – புளியந்தீவில் நடைபெற்ற நிகழ்வை தொடர்ந்து இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,

“நாங்கள் கடந்த காலங்களில்கூட திலீபனின் அகிம்சைவழிப் போராட்டத்தை கொச்சப்படுத்தியவர்கள் அல்ல. நாங்கள் அதனை மதித்திருக்கின்றோம். இந்த நாட்டிலே இருக்கின்ற தமிழ் மக்கள் ஏனைய சமூகத்துக்கு இணையாக தலைநிமிர்ந்து வாழவேண்டும், யாருக்கும் அடிமையாக இருக்கக் கூடாது என்ற தியாகி திலீபனின் கனவை நனவாக்க நாங்கள் இன்று அரசாங்கத்தோடு இணைந்திருந்து வேலை செய்து கொண்டிருக்கிறோம்.

சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தியாகி திலீபனின் விடயத்தில் நாங்கள் அமைதியாக இருந்தோம் என்பதை குற்றமாகக் கருதுகின்றனர். நாங்கள் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற கடையடைப்பு போராட்டத்தை குழப்பவில்லை. மறுப்பும் தெரிவிக்கவில்லை” – என்றார்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபனை ஒசாமா பில்லேடனுடன் ஒப்பிட்டதுடன், நினைவேந்தலை அனுமதிக்க முடியாது என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல பேசிய போது வியாழேந்திரனும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.